உலக நாயகனிடம் சில கேள்விகள்!


விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய
உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து அணுக முடியாது. கருத்து முதலில் கருத்தாக இருக்கவேண்டும், அறவுணர்வுடன் இருக்கவேண்டும், பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் அந்தக் கருத்தை அடக்குவதுதான் ஜனநாயக விரோதம் எனவே இது போன்ற விவாதத்தினால் எள்ளளவும் பயனில்லை. 

ஆனால் கமல் என்ற நடிகர், குறிப்பாக வர்த்தக நடிகர் தனக்கு சினிமாவில் நடிகனாக மட்டுமல்லாது சினிமா தொழில் சார்ந்த முறையத் தவிரவும் பல்வேறு வகைகளிலும் ஒரு சிறப்பான இடத்தைத் தானே கோரிக்கொள்கிறார். அந்த இடத்திற்கு அவர் உரிமை கோரும் அளவுக்கு அவர் செயல்பாடுகள் இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

தடை குறித்த அவரது அறிக்கையில் உள்ள விஷமத் தனமான ஒரு வார்த்தையே இதற்குச் சான்று. தன் நல்லுணர்வு சிதைக்கப்படுகிறது என்றும், சிறு குழுவின் கலாச்சார பயங்கரவாதம் என்றும் கூறுகிறார் கமல். அரசியல் ஆதாயம் தேடும் சிறு குழு எப்படி கலாச்சார ஏகாதிபத்தியம் செய்யமுடியும்?

அது மட்டுமல்ல விஷயம். "தேசப்பற்றுள்ள எந்த முஸ்லிமும் தன் படத்தைக் கண்டு பெருமை கொள்வார்" என்று கூறுகிறார் கமல்!

தேசப்பற்ற் என்பதை தீர்மானிக்கும் அளவு கோல் என்னன்ன? யார் அதை தீர்மானிப்பது? கமலா, ரஜினியா? ஷேர் மார்கெட்டில் கொள்ளை கொள்ளையாக மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் பண முதலைகளா? காங்கிரஸ் காரர்களா, பாஜகவினரா? யார் தீர்மானிப்பது கமல் சார்?

இந்துவாக இருப்பவன் இந்துவாக இருப்பதனாலேயே டீஃபால்டாக இந்தியனாகிவிடுகிறான் அவன் எவ்வளவு தேச விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஆனால் ஒரு முஸ்லிமின் தலையெழுத்து இந்த நாட்டில் தேசப்பற்றை நிரூபிக்க, இந்தியன் என்று கூப்பாடு போட தனது சொந்த அடையாளமான முஸ்லிம் அடையாளத்தையே துறக்கவும் வேண்டுமோ? முஸ்லிம் உணர்வுகளையும், குர் ஆனை ஒரு புனிதப்பிரதியாகவும் இந்துக்கள் ஏற்கிறார்களா, அல்லது இந்தியர்கள் ஏற்கிறார்களா?

தேசியவாத உணர்வை அவர்கள் மீது ஒரு சுமையாக ஏற்ற முடியாது. தேசப்பற்றுள்ள முஸ்லிம்க‌ள் என் படத்தைப் பார்த்து பெருமையே அடைவார்கள் என்பதை திருகலாக தகர்ப்பு ரீதியாக வாசித்தால் என்ன ஆகும்? என் படத்தைக் கண்டு பெருமைப்படும் முஸ்லிம்கள் தேசப்பற்றுள்ளவர்கள் என்று ஆகும். கமல் சொன்னதன் அர்த்தத்தை இப்படி புரிந்து கொள்வது தவறாகுமா? ஆசிரியர் கூறுவதன் பொருளை அவரின் நல்லுணர்வை முன் அனுமானித்துக் கொண்டு அதற்கு இணங்க புரிந்து கொள்ளும் வாசிப்பு முறை காலாவதியாகி பல பத்தாண்டுகள் கழிந்து விட்டது.

எனது படம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எப்படி பொருள் கொள்ளப்பட்டது? என்று திகைக்கிறார் கமல். ஒரு வாசிப்பு இன்னவாக இருக்குமென்று தீர்மானிக்கும் உரிமையை ஆசிரியன் இழந்தும் பல பல்லாண்டுகள் கழிந்து விட்டன.

முஸ்லிம் மக்களைப் பற்றிய, திரு குர் ஆனைப் பற்றிய, நபிகள் பற்றிய ஏகப்பட்ட எதிர்மறை, குப்பை ஸ்டீரியோ டைப்கள் மீடியாக்களிலும் வெகுஜன சினிமாக்களிலும் உலவுகின்றன. அது போன்ற பிம்பங்களை கமல் விஸ்வரூபத்தில் காட்சி ரீதியாக உடைத்திருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதுவரை அந்த ஸ்டீரியோ டைப்கள் பற்றிய இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டியதுதான்! ஸ்டீரியோ டைப்களை உடைத்து, அதனை கீழறுப்பு செய்யும் உத்திகளுக்கெல்லாம் செல்லும் கறார் சினிமாக்காரர் அல்ல கமல், அவரும் முஸ்லிம்களை, இஸ்லாமியர்களை, மற்றும் பயங்கரவாதத்தை வைத்து பொறுப்பற்ற முறையில் காசு பண்ணும் ஒரு நபர்தான் என்பதில் ஐயமில்லை.

தான் பற்றிய தனது இந்த பிம்பத்தை ஓரளவுக்கு அறிந்திருப்பதால்தான் கமல் சினிமா என்ற கடமைக்கு அப்பாலும் சமூக விவகாரங்களில் குரல் கொடுத்துள்ளதாக கோருகிறார். ஆனால் அவர் எவ்வளவு பிரச்சனைகளில் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார்?

கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்கு வாதாடும் இவர் குஷ்பு பாலியல் குறித்து கூறிய கருத்தினால் எழுந்த சர்ச்சையில் குஷ்புவின் கருத்துச் சுதந்திரத்தை எங்காவது ஆதரித்திருக்கிறாரா?

சரி குஷ்புவின் கருத்தை கமல் ஏற்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அந்த கருத்திற்காக அவர் கோர்ட் கோர்டாக இழுத்தடிக்கப்பட்டபோது இவர் அதற்கு ஏன் கண்டனம் எழுப்பவில்லை?

இரண்டாவது, மிக முக்கியமான விஷயம். இலங்கையில் தமிழின படுகொலை! 

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அந்த சமயத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடத்தப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியது. இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) ஆதரவு அளித்தது. அதன் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் சாட்சாத் கமல்ஹாசன்தான்!

எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு மே 17 இயக்கத்தினர் திரண்டு அவரிடம் மனு ஒன்றையும் அளித்தனர். தலைமைப்பொறுப்பேற்றிருந்த கமல் என்ன செய்து கொண்டிருந்தார்?

கமலின் சினிமா உணர்வுகளுக்கோ, கலைத் திறனுக்கோ விடுக்கப்பட்ட சவால் அல்ல இந்த கேள்விகள். மாறாக அவர் தனக்கென்று முன்னுரிமை கோரும் சமாச்சாரம் மேல்தான் நம் விமர்சனம்.

ஒரு சினிமா நடிகன் என்ற அளவில் கூட கலைப்புலி தாணுவின் கேள்விகளுக்கு இவர் என்ன எதிர்வினையாற்றினார்?

இஸ்லாமியர்களை இழிவு படுத்தும், பயங்கரவாதத்தை காசாக்கும் உலக ஆதிக்க போக்குகளின் மத்தியில் எதிர்-இஸ்லாமிய ஸ்டீரியோ டைப் காட்சிகள் ஏன் வைக்கப்படவேண்டும்?

தான் சிறப்புரிமை கோரும் அற நல்லுணர்வும் பொறுப்பும் இருக்கின்ற கமல் ஹாசன் ஏன் நாட்டின் பிற பிரச்சனைகள் பற்றி படம் எடுக்க முயற்சி செய்யவில்லை?

'சமூக மனசாட்சி'-யின் காரணமாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் அப்சல் குரு விவகாரத்தை வைத்து ஒரு 'ஸ்பை த்ரில்லர்' எடுக்க வேண்டியதுதானே? நியூயார்க் நகரம் அழிந்து விடும் அச்சுறுத்தல் என்ற ஒரு கற்பனையான கதைச்சூழலை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

அவ்வளவு திரைப்படங்கள் இருக்க வென்ஸ்டே என்ற படத்திற்கு அனுமதி வாங்கி உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை ஏன் எடுக்கவேண்டும்? வியாபாரமும் வேண்டும், தனது உள்நோக்கத்தையும் உள்ளெண்ணத்தையும் திருப்தி செய்து கொள்ளவேண்டும், பழி ஏற்படும்போது பாதுகாப்பெய்த தன்னை ஒரு மனிதநேய வாதியாகவும், மத சகிப்புத் தன்மை மிக்கராகவும் காட்டிக் கொள்ளவேண்டும். பாவம் கமலுக்குத்தான் எவ்வளவு பொறுப்புகள்? இந்த சமூகம் ஒரு 'கலைஞன்' மீது எவ்வளவு பொறுப்புகளை சுமத்தி விடுகிறது பாவம்!

உன்னைப்போல் ஒருவன் போல் ஒரு மிடில் கிளா‌ஸ் இந்து படத்தை ஆர்.எஸ்.எஸ். காரர் கூட எடுக்க மாட்டார்! பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட கூட தகுதியற்றவர்கள். அவர்கள் சுட்டுத் தள்ளப்படவேண்டும், அதை அரசாங்கம் செய்யவில்லை என்றால் 'நல்லுணர்வு'கொண்ட இந்து மத்தியதரவர்க்க நபர் செய்யவேண்டும்! இதுதான் அவரது ஐடியாலஜி அந்த படத்தில். ஹிந்தியிலிருந்து ரீமேக் என்றாலும் கமலின் சாய்ஸ் அவர் சார்ந்த ஐடியாலஜியைச் சார்ந்த விஷயமே.

விருமாண்டி என்ற படம் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் சடங்கு சம்பிரதாயங்களை புனிதமாக்கம் செய்யும் ஒரு படம், ஆனால் அதை ஏதோ தூக்குத் தண்டனைக்கு எதிரான படமாக திரித்து விட்டார் கமல். இதற்கு ஜப்பான் மேதை குரசொவாவின் கதை சொல் முறை. இதுதான் கமல்! மேதைகளின் உத்தியைக் கொண்டு தனது ஐடியாலஜியை சாமர்த்தியமாக மறைப்பது!

மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் நடிகராக கடமையின் குரல் அழைக்கும்போது இந்தியன் கொலைகாரத் தாத்தாவாகவும் மாறுவார்! இது என்ன முரண்பாடு?

ஹே ராம் படத்திலும் ஒரு இந்து தனது குடுபத்தின் அழிவுக்கு பழி வாங்க புறப்படுகிறான். அப்போதும் கூட இந்து அடிப்படைவாதிகளுக்கு ஒரு அடையாளம் தருகிறார், இவர்களுக்கு குடும்பம், பொறுப்பு இருக்கிறது. குறைந்தது இவர்கள் தாங்கள் சார்ந்த ஆதிக்கக் கருத்தியலுக்கு உண்மையானவர்களாக இருப்பதாக காட்டப்படுகிறது. அபயங்கர் என்ற காதாபாத்திரத்தின் மூலம் இந்து அடிப்படைவாதத்தின் கொலைவெறியை கமல் காண்பிக்கவில்லை மாறாக ஐடியாலஜிக்கு அவர் எவ்வளவு உணர்வு பூர்வமாக இருக்கிறார். மரணப்படுக்கையிலும் அவன் தன் கொலைக் கருத்தியலுக்கு எவ்வளவு உண்மையானவனாக இருக்கிறான் என்றே காண்பிக்கிறார்.

மாறாக முஸ்லிம்கள்களை ஏதோ கலவரக் கும்பலாகவும், ஏதோ கூட்டமாகவும் கொலை செய்வதே தொழில் கொண்ட வன்முறையாளர்கள் போலவும் சித்தரித்துள்ளார் இதனை சக்ரவர்த்தி என்ற விமர்சகர் தனது ஆங்கிலக் கட்டுரையில் எண்பித்துள்ளார்.

எந்த சாவு தேசிய வருத்ததிற்கும் துக்கத்திற்கும் உகந்தது, எந்த சாவு மதிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உலகம் முழுதும் அனைத்து ஊடகங்களும் தரம் பிரித்து வைத்துள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிலும் குண்டுகளை போட்டு மனித உயிர்கள பல அழிந்தாலும், ஒரு அமெரிக்கன் செத்தால் அது நாடே துக்கப்படவேண்டிய விஷயம்! நாடு மட்டுமல்ல உலகே துக்கப்படவேண்டிய மரணம். இது என்ன அநீதி?

அபுகிரைப் சித்தரவதைக் கூடம், குவா‌‌ண்டனாமோ பே, இந்தியாவிலும் சில மறைவிடங்களில் உள்ள சித்தரவதைக் கூடங்கள் பற்றி கமல் சார் ஒரு ஸ்பை த்ரில்லை எடுத்து விட்டு அதற்காக அது தடை செய்யப்படுமானால் அப்போது நிற்கிறோம் கமல் சார் உங்கள் பக்கம்! அது வரை எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்வது ஜனநாயகமல்ல என்ற ஒரு கண்டனத்தை தவிர வேறு எதையும் கூறிவிடமுடியாத நிலையில் இருக்கிறோம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget