எப்போது தலைக்கு குளித்தாலும், குளித்தப் பின்னர் கூந்தலைப் பார்த்தால், அடங்காமல் அதிக வறட்சியுடன் இருக்கும். எனவே அந்த வறட்சியைத் தடுக்க, கூந்தலை ஷாம்பு போட்டு அலசியப் பின்னர் கண்டிஷனர் போட்டு குளிக்கச் சொல்வார்கள். சொல்லப்போனால், கண்டிஷனர் பயன்படுத்தினால், கூந்தல் வறட்சியை தடுத்து, பொலிவோடு வைக்கலாம். ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்திருக்கும் கண்டிஷனரைப்
பயன்படுத்தினால், சிலருக்கு கூந்தல் அதிகமாக உதிரத் தொடங்கும். இருப்பினும் சிலர் கெமிக்கல் கலந்திருப்பது தெரிந்தும், அதைப் பயன்படுத்துவதை நிறுத்தாமல், விலை மதிப்புள்ள கண்டிஷனரைப் பயன்படுத்துவார்கள். ஒரு முறை கெமிக்கல் ஒப்புக் கொள்ளவில்லையெனில், அதை விடாமல் வேறொன்று வாங்கி பயன்படுத்தினால் மட்டும் கூந்தல் உதிர்வது நின்றுவிடுமா என்ன? அவ்வாறு மறுமுறை தரமான கெமிக்கல் கலந்துள்ள கண்டிஷனரைப் பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் கூந்தலை மென்மையாக்கும் பழங்களை வைத்து கண்டிஷனர் செய்தால், கூந்தல் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் கூந்தலுக்கான நன்மைகள் நிறைய உள்ளன. இந்த பழம் வறட்சியான, பொலிவிழந்து இருக்கும் கூந்தலுக்கு மிகவும் சிறப்பான பலனைத் தரும். அதிலும் வாழைப்பழத்தை வைத்து சூப்பரான ஒரு ஹேர் பேக் போட்டால், கூந்தலை நன்கு மென்மையாக, பட்டுப் போன்று மாற்றலாம். அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து, கலந்து கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
பப்பாளி : வீட்டிலேயே கூந்தலை நன்கு பராமரிக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு நன்கு கனிந்த பப்பாளி சிறந்ததாக இருக்கும். அதிலும் கனிந்த பப்பாளி நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் 1-2 துளிகள் கிளிசரின் விட்டு, கூந்தலில் தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, நீரில் அலசினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, பொலிவோடு மின்னும். அதுமட்டுமின்றி, கூந்தலில் வெடிப்புகள் ஏற்படாமலும் இந்த முறை தடுக்கும்.
வெண்ணெய் பழம் (Avocado) : கூந்தல் பராமரிப்பிற்கு இருக்கும் பழங்களில் வெண்ணெய் பழம் எனப்படும் அவோகேடோவும் ஒன்று. அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து, மசித்து, சிறிது தேன், ஷியா வெண்ணெய், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தயிர் சேர்த்து, நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
பேரிக்காய் : பேரிக்காயும் கூந்தலை பட்டுப் போன்று வைப்பதில் சிறந்தது. அதற்கு இதனை நன்கு அரைத்து, அதோடு ஷியா வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அடங்காத முடி உள்ளவர்கள் கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி : கூந்தல் நன்கு அடர்த்தியாக, அழகாக பொலிவோடு இருக்க வேண்டுமெனில் அதற்கு ஸ்ட்ராபெர்ரி ஹேர் கண்டிஷனர் தான் சிறந்தது. அதற்கு ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அத்துடன் மயோனைஸ் அல்லது தயிர் சேர்த்து, கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இல்லையெனில் ஸ்ட்ராபெர்ரியுடன் பால் சேர்த்து, கூந்தலுக்கு தடவலாம்.