இது 2 ஆவிகள் சேர்ந்து தங்களின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை. பாபுகணேசும், அவருடைய நண்பர்களும் ஆதிவாசிகளை பற்றி ‘ஆல்பம்‘ தயாரிப்பதற்காக, காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கே, வனத்துறை அதிகாரி சரண்ராஜுக்கும், இவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதில், சரண்ராஜ் இறந்து விடுகிறார். அவருடைய உடலை தூக்கி காட்டாற்றில் வீசுகிறார்கள், பாபுகணேசின் நண்பர்கள். ஆதிவாசிகளின் வழக்கப்படி ஒரு ஆண், ஒரு
பெண்ணுக்கு பச்சை குத்தினால், இருவரும் கணவன்–மனைவி ஆகிவிடுவார்கள். இதற்காக அழகான ஆதிவாசிப்பெண் வகிதாவை குள்ளமான ஆதிவாசி துரத்தி வருகிறார். வகிதா, பாபுகணேஷ் குழுவினரிடம் அடைக்கலம் ஆகிறார். பாபுகணேஷ் விளையாட்டாக வகிதாவின் கையில் பச்சை குத்தி விடுகிறார். அவரை தன் கணவராக மனதுக்குள் ஏற்றுக்கொள்கிறார், வகிதா. அவரை தந்திரமாக மது அருந்த வைத்து, பாபுகணேசின் நண்பர்களான ஸ்ரீமனும், சின்னிஜெயந்தும் கெடுத்து விடுகிறார்கள். அதற்கு அவர்களின் சினேகிதிகள் இப்ரா, ஸ்டெபி, விக்டோரியா ஆகிய மூவரும் உடந்தையாக இருக்கிறார்கள். கற்பை பறிகொடுத்த வகிதா, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
சரண்ராஜின் ஆவியும், வகிதாவின் ஆவியும் பாபுகணேசின் நண்பர்களையும், சினேகிதிகளையும் எப்படி பழிவாங்குகின்றன என்பது திகிலான ‘கிளைமாக்ஸ்.’
பேய் கதை என்பதால், முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். படப்பிடிப்புக்காக தேர்ந்தெடுத்த இடங்களே மிரட்டுகின்றன. நடுக்காட்டுக்குள் வகிதாவின் ஆவி, காருக்கு குறுக்கே செல்வதில் இருந்து திகில் ஆரம்பிக்கிறது. காட்டுக்குள் பூஜை நடத்தும் அகோரி சாமியார் (‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்), ஆதிவாசிகள், இருள் சூழ்ந்த காட்டு பங்களா என படம் முழுக்க பயமுறுத்தல்கள். உடம்பு முழுக்க மல்லிகைப்பூவை சுற்றிக்கொண்டு ஆவியாக வகிதா வரும் காட்சிகளில், தியேட்டரில் மல்லிகைப்பூ வாசனை வரவைத்து, புதுமை செய்திருக்கிறார், டைரக்டர் பாபுகணேஷ். ஏற்கனவே ‘கின்னஸ்’ சாதனை புரிந்த இவர், இந்த படத்தில் கதை–திரைக்கதை–வசனம்–டைரக்ஷன் உள்பட 14 பொறுப்புகள் ஏற்று மீண்டும் ‘கின்னஸ்’ சாதனைக்கு முயன்று இருக்கிறார்.
திகிலான காட்சிகளுக்கு இடையே ஸ்ரீமன், சின்னிஜெயந்த் இருவரும் ‘காமெடி’ செய்து இருக்கிறார்கள். இவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கும் ரிஷிகாந்த்–திவ்யா ஜோடியிடம் இளமை துள்ளல். குயிலம்மா, சந்தையில மீனு வாங்கி, நானே வருவேன் ஆகிய இனிமையான பாடல்கள், படத்தின் பலம். படத்தொகுப்பும், பின்னணி இசையும், பலவீனங்கள். பேய் வராத காட்சிகளில் கூட, மிரட்டல் சத்தம் தேவைதானா?