தொலைக்காட்சிகளில் நாயகனகாக வலம் வந்த விஜய் ஆதிராஜ் இயக்கியிருக்கும் படம். டிவி தொடர்களில் அதிகமாக நடித்ததாலோ என்னமோ கொஞ்சம் காஸ்ட்லியான தொலைக்காட்சித் தொடரை எடுத்திருக்கிறார். சத்யா, சஞ்சய் பாரதி, விக்னேஷ் மூன்று பேரும் மேன்ஷனில் தங்கியிருக்கும் நண்பர்கள். சராசரியான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சத்யாவிற்கு மட்டும் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. சத்யா – ராகுல் ப்ரீத் இருவரும் காதலர்கள்.
டிவி நிருபரான ராகுல் ப்ரீத்துக்காக
லைப்ரரயில் ஒரு புத்தகத்தை எடுக்கச் செல்கிறார் சத்யா. அந்த புத்தகத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை புதைத்து வைத்துள்ளதைப் பற்றிய ஒரு கடிதம் இருக்கிறது. அக்கடிதத்தின் படி, பல கோடி ரூபாய்களை சத்யா, சஞ்சய் பாரதி, விக்னேஷ் ஆகியோர் கைப்பற்றுகிறார்கள்.
இதனிடையே, அரசியல்வாதியான சுரேஷ் அவருடைய பல கோடி ரூபாயை நண்பன் தலைவாசல் விஜய்யிடம் மறைத்து வைக்கச் சொல்லி ஒப்படைக்க, திடீரென விபத்தில் இறந்து போகிறார் விஜய். இதன் பின் பணத்தை கண்டுபிடிப்ப்தற்காக முன்னாள் மிலிட்டரி ஆபீசர் ஜெகபதிபாபுவிடம் வேலையை ஒப்படைக்கிறார். இதன் பின் சத்யா அன்ட் கோவிடமிருந்த பணத்தை ஜெகபதிபாபு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
ஆர்யா தம்பி சத்யா இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். பாவம், வேறு எந்த படத்திலும் அவரை அறிமுகப்படுத்த முடியவில்லை போலும். அவருக்கு வருவதை அவரும் செய்திருக்கிறார்.
சத்யாவின் நண்பர்களாக சஞ்சய் பாரதி, விக்னேஷ் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
ராகுல் ப்ரீத் ஒரு ‘ஆர்வக் கோளாறு’ நிருபர். இந்த காலத்தில் யார் இப்படியெல்லாம் செய்திகளைக் கொடுக்கிறார்கள். அதுவும் ஒரு கவுன்சிலரின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள். அவனவன் உலக ஊழலை பத்தி பேசிக்கிட்டிருக்கான், இவங்க என்னடான்னா, உள்ளூர் அரசியல்வாதி ஊழலை பேசறாங்க…
ஜெகபதி பாபு, ஒரு வித்தியாமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காருன்னு சொல்ல ஆசைதான். அவர் என்ன பண்ணுவாரு, ஆந்திரா பக்கம் அவரை யாரும் கூப்பிடலை போல, இங்க வந்து, தாண்டவம், புத்தகம்-னு நடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாயிட்டாரு.
சுரேஷ் வில்லனாம். இவரு பண்ற வில்லத்தனத்தையெல்லாம் 20 வருஷம் முன்னாடியே நம்ம ரசிகர்கள் ஓரம் கட்டிட்டாங்க. இன்னும் நிறைய டிவி ஆர்ட்டிஸ்ட் நடிச்சிருக்காங்க…டைரக்டருக்கு வேண்டப்பட்டவங்களா இருப்பாங்க.
ஜேம்ஸ் வசந்தன் இசை, ஒரு ‘கண்கள் இரண்டால்…..’ பாட்டை வச்சே எவ்வளவு நாள் காலம் தள்றது. சீக்கிரம் ஒரு நல்ல பாட்டா போடுங்க ஸார்.
‘புத்தகம்’ – படிக்கிற மாதிரி இல்ல….