எதிர்நீச்சல் சினிமா விமர்சனம்



இயக்குனர் துரை இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் எதிர்நீச்சல்.  எதிர்நீச்சல் திரைப்படத்தின் பாடல்கள் யூத் எண்டர்டெயினராக  இளவட்டங்களிடையே பிரபலமாகியதால், முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்தனர் ரசிகர்கள்.தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்து, மேன்மேலும் புகழ் தேடித்தரவிருந்த ஒரு பெண்ணின் கனவுகள் கலைக்கப்பட்ட ஒரு
மறக்கப்பட்ட சம்பவத்தை கதைக்கருவாக எடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர். நவீனமயமாகிவிட்ட உலகத்தில், பழமை என்பது வேப்பங்காயாக இருக்கிறது இளைய தலைமுறையினருக்கு. அதுபோல குஞ்சிதபாதம் என்ற தனது பெயர் பிடிக்காமல், வேறு பெயர் மாற்றும் எண்ணத்துடன் வளர்கிறார் சிவகார்த்திகேயன். அப்பா, அம்மா என வரிசையாக இருவரையும் இழந்து, படித்து ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேரும் சிவகார்த்திகேயனுக்கு ப்ரியா ஆனந்தின் அறிமுகம் கிடைக்கிறது. குஞ்சிதபாதம் என்கிற பெயரை ஜாதகம் பார்த்து ஹரிஷ் என்று மாற்றிக்கொள்ளும் சிவகார்த்திகேயன், ஹரிஷ் என்ற பெயரிலேயே ப்ரியா ஆனந்திடம் பழகுகிறார். இருவரிடையேயும் மலர்ந்த காதல் காயாகி, பழமாகும் சமயத்தில் சிவகார்த்திகேயன் பெயர் மாற்றி சொன்னது தெரிந்துவிடுகிறது ப்ரியா ஆனந்திற்கு. 

சமீப காலமாக பெண்களிடம் வேறு பெயரில் பழகி ஏமாற்றிவிட்டு செல்லும் ட்ரெண்ட் அதிகமாகிவிட்டதால், சிவகார்த்திகேயனையும் அந்த லிஸ்டில் சேர்த்து வெறுத்துவிடுகிறார் ப்ரியா ஆனந்த். காதல் கைவிட்டதும் வாழ்க்கையில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என நினைத்து பார்க்கிறார் சிவகார்த்திகேயன். (எல்லா பசங்களுக்கும் காதலி பக்கத்துல இல்லைன்னா தான் வாழ்க்கையைப் பற்றி நியாபகம் வருது) எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உறுதி ஏற்கும் சிவகார்த்திகேயன் கண்களில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கான அறிவிப்பு தென்படுகிறது. 

பள்ளியில் படித்த போதே ஓட்டப்பந்தயத்தில் பரிசுகள் பெற்றிருந்த சிவகார்த்திகேயன், மாரத்தானில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதற்கான பயிற்சியில் ஈடுபடுகிறார். சிவகார்த்திகேயனின் தன்னம்பிக்கையைக் கண்டு(லவ்வாமாம்!) ப்ரியா ஆனந்த் ஒரு பயிற்சியாளரை அறிமுகம் செய்து வைக்க, அவர் கிராமத்தில் இருக்கும் வள்ளி என்ற பெண்ணிடம் சிவகார்த்திகேயனை அனுப்பிவைக்கிறார்.

சாதாரண பெண்ணான வள்ளியால் என்ன பயிற்சி தரமுடியும் என்ற சிவகார்த்திகேயனின் எண்ணத்தைப் போல சேறு மிதிக்க சொல்வது, பலூன் ஊத சொல்வது, நாயை அவிழ்த்து விட்டு விரட்டுவது என சம்மந்தமில்லாத வேலைகளில் சிவகார்த்திகேயனை வள்ளி ஈடுபடுத்த கடுப்பாகி சென்னைக்கு வந்துவிடுகிறார் சிவகார்த்திகேயன்.

இங்குவந்து பயிற்சியாளரை சந்தித்த பிறகே வள்ளி கொடுத்த பயிற்சி அனைத்தும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்காக என தெரிவது மட்டுமல்லாமல் வள்ளிக்கு நேர்ந்த கொடுமையும் தெரியவருகிறது. 

ஆசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாந்தியின் கதாபாத்தில் வள்ளியாக அட்டக்கத்தி நந்திதா நடித்துள்ளார். ஒரு பணக்காரரின் பெண் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திறமைசாலியான வள்ளியின் மீது குற்றம் சுமத்தப்பட்டு, வள்ளி பெண் அல்ல ஆண் என்று கூறி பால்ய பரிசோதனை செய்யும் அளவிற்கு அவளை கொண்டு போய், அவளது கனவை இருட்டில் தள்ளிய கதை தெரியவர மீண்டும் பயிற்சிக்குப் போகிறார் சிவகார்த்திகேயன். அப்போது வள்ளியின் கனவை கெடுத்த பயிற்சியாளரின் மகன் சிவகார்த்திகேயனுடன் மாரத்தானில் ஓடுவது தெரியவர, கடும் பயிற்சி எடுத்து மாரத்தானில் வெற்றி பெறுகிறார் சிவகார்த்திகேயன்.

இளவட்டங்களுக்கான காதல் கதையாக ரசிகர்களின் மனதில் நுழைந்த எதிர்நீச்சல் திரைப்படம், அழுத்தமான கருத்தினால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் பிடிக்கிறது. எதிர்நீச்சல் திரைப்படத்தின் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். அனைத்து பாடல்களும் ஹிட்டானதுடன், பாடல் காட்சிகள் பார்த்து ரசிக்கவும் ஏற்றதாக இருக்கின்றன.

’சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ பாடலில் தனுஷும், சிவகார்த்திகேயனும் செம்ம்ம ஆட்டம் ஆடியுள்ளனர்.  நயன்தாராவும் நடனமாடியிருக்கிறார் என்றாலும், அவரைப் பார்க்கும் போது கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தான் நியாபகம் வருகிறது.

முதல் பாதி படம் முழுக்க காமெடி கலக்கலாக நீரோட்டம் போல செல்லும் கதை, இரண்டாம் பாதி எதிர்நீச்சலுடன் அழுத்தமாக செல்கிறது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget