மேன் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் சினிமா விமர்சனம்

2012ம் ஆண்டு ஜுலை மாதம் ‘டார்க் நைட் ரைசஸ்’ திரைப்படம் வெளியான போது திரையரங்குகளில் ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ டீசர் வெளியானது. அன்று தொடங்கி ஏறத்தாழ ஒரு வருடமாக மேன் ஆஃப் ஸ்டீல் ஏகோபித்தமாக எதிர்பார்க்கப்பட்டது. காரணம் ‘300’ இயக்கிய ஜாக் ஸ்நைடரின் இயக்கத்திலே வெளிவரும் படம் என்பதனால் மட்டுமல்ல, இயக்குனர் க்ரிஸ்டோபர் நோலானின் கதை தயாரிப்பில் வரும் படம் என்பதாலும் தான்.

காமிக்ஸ் புத்தகங்களின் தலைமகனாகிய டி.சி.காமிக்ஸ் புத்தகங்களில் அங்கம் வகிக்கும் பிக்ஷ்னல் கிரகம் தான் க்ரிப்டான். க்ரிப்டான் கிரகத்தில் வசிக்கும் விஞ்ஞானி ரசூல் க்ரௌ.  கிரகம் அழியப்போகும் நிலைவர க்ரிப்டானின் ஜெனரல் மைக்கேல் ஷனான் அனைவரையும் அழிக்கத் துவங்குகிறார். இந்நிலையில் ரசூல் க்ரௌ தன் சிறிய குழந்தையை ஒரு ஸ்பேஸ் கிராஃப்டில் போட்டு பூமிக்கு அனுப்பி வைக்கிறார். மைக்கேல் ஷெனான் மானுட உலகத்தை அழிக்க நினைக்க இதைத் தடுக்கப் பார்க்கும் ரசூல் க்ரௌவைக் கொலை செய்கிறார். 

க்ரிப்டான் கிரகத்தின் ஒரே வம்ச விருக்ஷமான கால்-எல் என்று பெயரிடப்பட்ட ரசூல் க்ரௌவின் மகன் பூலோகத்தில் தன் வளர்ப்புப் பெற்றோர்களால் க்ளார்க் கென்ட் என்று பெயர் சூட்டப்படுகிறார். சிறு வயதிலேயே சூப்பர் நேச்சுரல் சக்திகள் பெற்றிருப்பதை அறியும் க்ளார்க் (ஹென்றி காவில்) பல உயிர்களைக் காக்கிறார்.  தன் உண்மை அடையாளத்தை மறைப்பதற்காக பல்வேறு இடங்களில் நாடோடி போல் பயணிக்கிறார். 

இவர் அனுப்பப்பட்ட ஸ்பேஸ் கிராப்டை கண்டறியும் வில்லன் மைக்கேல், ஹென்றியைக் கைப்பற்றி உலகத்தை அழிக்கப்பார்க்கிறார்.  ஸைன்டிஸ்டாகிய ரசூல் க்ரௌ ஹோலோகிராம் இமேஜாக ஹென்றி முன் தோன்றி தன் மகனின் பிறப்பின் ரகசியத்தைக் கூறுகிறார். இதன் பின் என்ன??? சூப்பர்மேன் வீரதீர சாகஸம் செய்து வில்லனிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றுவதுதான் மீதிப் படம்.

படத்தின் முக்கிய ஹைலைட்டே சண்டைக் காட்சிகள்தான்.  கடைசி அரை மணிநேரத்தில் பிரமாண்டத்தில் வியந்து, பிளந்த வாய் படம் முடியும் வரை மூடப்படவில்லை.  அப்பப்பா எத்தனை பில்டிங் எத்தனை செலவு.  சண்டைக் காட்சிகளில் காணப்பட்ட பிரம்மாண்டம் ஒரு புறம் வியக்க வைக்க, மறுபுறம் க்ரிப்டான் கிரகம் அமைக்கப்பெற்ற கலையம்சம். ‘சக்கர்பஞ்ச்’, ‘300’, ’வாட்ச்மேன்’ படங்களில் விஷுவல் எபெக்டில் சக்கைப்போடு போட்ட ஜாக் ஸ்நைடர் ‘மேன் ஆஃப் ஸ்டீலிலும்’ ஒரு கலக்கு கலக்கியுள்ளார். 

சூப்பர் ஹீரோ படம் என்பதாலோ என்னவோ!! நாயகன் நாயகிக்கு நடுவில் வரும் ரொமான்ஸ் டிராக்கில் கவனம் செலுத்தப்படவில்லை. நடிப்பிலும் ஹீரோவைத் தவிர வேறு யாரும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹான்ஸ் ஸிம்மரின் ,இசை படத்தின் உயிர்நாடி.  

என்னதான் ஆஹா ஓஹோ என்று படமாக்கப்பட்டிருந்தாலும் மேன் ஆஃப் ஸ்டீல் முழு திருப்தி தரவில்லை. பேட்மேன் ஸீரிசில்  காணப்பட்ட கெத்தான வசனங்களும், கிளாஸிக் ஃபீல் இதில் குறைவு, ஸ்பைடர் மேன் அயன் மேன் படத்தில் காணப்பட்ட மசாலா அம்சங்களும் இதில் கிடையாது.

மொத்தத்தில்: சூப்பர்ஹீரோ படங்களுக்குத் தேவையான ஹீரோயிசம் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். இருப்பினும் விஷுவல் எபெக்டில் சக்கைப் போடு போடும் "மேன் ஆஃப் ஸ்டீல்"  ‘சூப்பர் மேன்’ படம் என்றாலே மொக்கை என்னும் எண்ணத்தை உடைத்து வரும் நாட்களில், இந்த ஸீரிஸை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம் என்ற எண்ணத்தை வித்திட்டுள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget