இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம்.
இதன் மூலம் நாம் டிவிடி சிஸ்டம் டிஸ்க் மூலம், விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது போல, இதனைப் பயன்படுத்தியும் இன்ஸ்டால் செய்திட முடியும்.
இதற்கான முதல் தேவை, விண்டோஸ் சிஸ்டத்தின் ஐ.எஸ்.ஓ. பைல். இதனைத் தேடிப் பிடித்து, காப்பி செய்து, கம்ப்யூட்டரின் ட்ரைவ் ஒன்றில் முதலில் பதிந்து வைத்திருக்க வேண்டும்.
தேவையான சாதனங்கள்: பூட் செய்திடக் கூடிய, யு.எஸ்.பி. ட்ரைவினத் தயார் செய்திட, குறைந்தது 4 ஜிபி இடம் உள்ள, பிளாஷ் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். தயார் செய்து எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே தரப்பட்டுள்ளது போல செயல்படவும்.
1. மேலே சொன்னபடி தயார் செய்த யு.எஸ்.பி. ட்ரைவினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி ட்ரைவில் இணைக்கவும்.
2. பின்னர் Start மெனு செல்லவும். அங்கு cmd என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் தேடல் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து diskpart என டைப் செய்து என்டர் தட்டவும். diskpart என்பது, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ட்ரைவ் பார்ட்டிஷன் மற்றும் ட்ரைவ்களைக் கையாளும் ஒரு யுடிலிட்டி புரோகிராம்.
4. diskpart புரோகிராம் இயங்கத் தொடங்கும் போது, கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளி DISKPART என மாறியிருப்பதனைக் காணலாம்.
5. அடுத்து list volume என்ற கட்டளைச் சொல்லை டைப் செய்திடவும். இந்தக் கட்டளை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் வால்யூம்கள் அனைத்தையும் பட்டியலிடும்.
6. இந்தக் கட்டளையின் விளைவாகக் காட்டப்படும் தகவல்களிலிருந்து, நமக்குத் தேவைப்படும் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் 8 ஜிபி ப்ளஷ் ட்ரைவ் பயன்படுத்தியதால், 7399 எம்பி என்ற டிஸ்க்கினைத் தேர்ந்தெடுத்தேன்.
'இங்கு சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறுதலாக, பெர்சனல் கம்ப்யூட்டரின் ட்ரைவினைத் தேர்ந்தெடுத்தால், அந்த ட்ரைவில் உள்ள டேட்டா அழிவதுடன், விபரீதமான விளைவுகளும் ஏற்படலாம்.
7. அடுத்து select volume என்ற கட்டளையைத் தரவும். இந்தக் கட்டளையினை, ட்ரைவ் ஒன்றின் எண் பெயரோடு தர வேண்டும். கட்டளைக்கான முடிவுகளில், முதல் காலத்தில் காட்டப்படும் எண் இதுதான். சரியான எண்ணைத் தரவும். இப்போது நாம் சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து விட்டதால், Clean கட்டளையினைக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை, அந்த ட்ரைவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நீக்கிவிடும். நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன் ஸ்ட்ரக்சர் (Partition Structure) அமைக்க ஏதுவாக, ட்ரைவினை வடிவமைக்கும்.
8. அடுத்து நாம் முதன்மைப் பிரிவினை (Primary Partition) அமைக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து பூட் டிஸ்க்குகளிலும், முதன்மை பார்ட்டிஷன் இருக்க வேண்டும். create partition primary என்ற கட்டளையைத் தரவும்.
9. ஒரு பூட் டிஸ்க்கின் இதயம் என அதன் பூட் செக்டாரைக் (Boot Sector) கூறலாம். இந்த பூட் செக்டார், ட்ரைவின் பிரைமரி பார்ட்டிஷனில் தான் எழுதப்பட வேண்டும் என்பதால், அது செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். active என்ற கட்டளை கொடுத்து, பார்ட்டிஷன் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டவும்.
10. அடுத்து நாம் குறிப்பிட்ட டிஸ்க்கினை பார்மட் (Format) செய்தாக வேண்டும். விண்டோஸ் தற்போது NTFS என்ற வகை டிஸ்க் பார்ட்டிஷனை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. எனவே format fs=NTFS என்ற கட்டளையைக் கொடுக்கவும். பார்மட் செயல்பாடு முடிந்தவுடன், கமாண்ட் விண்டோவினை மூடவும்.
11. அடுத்து மிக முக்கியமான செயல்பாட்டிற்குச் செல்லப் போகிறோம். ஏற்கனவே எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐ.எஸ்.ஓ. பைலின் Boot போல்டருக்குச் செல்லவும். அடுத்து காலியாக உள்ள இடத்தில், shift+right கிளிக் செய்து, Open command window here என்று இருப்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.
12. அடுத்து கமாண்ட் விண்டோவில், bootsect.exe/nt60 என்ற கட்டளையைச் சரியான ட்ரைவ் எழுத்துடன் அமைக்கவும். அதாவது, யு.எஸ்.பி. ட்ரைவ் காட்டப்படும் ட்ரைவ் எழுத்து. என்னுடைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. ட்ரைவ் J: ஆகக் காட்டப்படுவதால், நான் அந்த எழுத்தினையே இணைத்தேன். நீங்கள், உங்கள் கம்ப்யூட்டருக்கேற்ற எழுத்தினை இணைத்து அமைக்கவும்.
13. அடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரரில், எந்த ட்ரைவில் ஐ.எஸ்.ஓ. பைல் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பதியப்பட்டதோ, அந்த ட்ரைவில் உள்ள ரூட் (root) போல்டருக்குச் செல்லவும். இங்கு boot, efi, sources, support, upgrade என்பன போன்ற போல்டர்கள் இருக்கும். இங்கு தான் bootmgr, autorun.inf ஆகிய பைல்களும் இருக்கும். இந்த போல்டர் மற்றும் பைல்கள் அனைத்தையும் காப்பி செய்து, பூட் யு.எஸ்.பி. ட்ரைவில் பதியவும்.
அவ்வளவுதான்! இப்போது உங்களிடம் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திடும் வகையிலான யு.எஸ்.பி. ட்ரைவ் தயாராகி உள்ளது. இதனை சிக்கல்கள் ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ள படி நிலைகளின் படி சரியாகச் செயல்பட்டு, இந்த பூட்டபிள் டிஸ்க்கினைத் தயார் செய்திட வேண்டும்.