இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர். பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த
பூச்சி இனமான தேனீக்கள் இதுவரையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாதவை என்றே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த தேனீக்கள் வசித்த தேன் கூட்டின் மீது எதிராளிகள் தாக்குவது போன்று போலியான தாக்குதலை நடத்தினர். பின் அவற்றின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன. மிக சிறிதளவே கொண்ட அவற்றின் மூளையில் அழுத்தத்தை தோற்றுவிக்கும் வேதிபொருள்களான டோபமைன், செரோடனின் மற்றும் ஆக்டோபமைன் ஆகியவற்றின் அளவுகள் மாறுபடுவதை கண்டறிந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது தேனீக்களானது விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் தேனீக்களின் பிற உணர்வுகளையும் பற்றி அறிந்து கொள்ள ஆய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.