அதெல்லாம் ஒரு காலமுங்க….. என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் சிறுபட தயாரிப்பாளர்கள். திருவிழா காலங்களில் அப்போதெல்லாம் குறைந்தது பத்து படங்களாவது ரிலீஸாகும் அத்தனை படங்களுக்குமே தியேட்டர் கிடைக்கும். ஆனால் இன்றைக்கு அந்த சூழ்நிலை இல்லை.
ஸ்டார் அந்தஸ்து நடிகர்கள் நடிக்கும் படங்கள் மொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக்கொள்ள, தியேட்டர் கிடைக்காமல் சின்ன பட்ஜெட் படங்கள், ரிலீஸ் தேதி தெரியாமலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை. இந்த பொங்கலுக்கு இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால், வருடத்தின் கடைசி வாரமான முந்தைய வெள்ளிக்கிழமையே ஒரு டஜன் படங்கள் வெளியாகிவிட்டது. பாவம்… இந்த சிக்கலில் எத்தனை சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் போட்ட முதலை புஸ்வாணமாக பார்க்கப்போகிறார்களோ?!
பொங்கல் ரிலீஸ் லிஸ்ட்டில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘நண்பன்’, லிங்குசாமி இயக்கத்தில் மாதவன்,ஆர்யா, சமிராரெட்டி, அமலாபால் நடித்துள்ள ‘வேட்டை’ ஆகிய இரண்டே படங்கள்தான் இருக்கிறது. வெளியான ஒரே வாரத்தில் கலெக்ஷனை அள்ளிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பொங்கலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே அதாவது 12-ந்தேதியே படத்தை வெளியிடுகின்றனர். சென்னையில் மட்டும் நண்பன் படம் 22 தியேட்டர்களிலும், வேட்டை 20 தியேட்டர்களிலும் வெளியாகிறது.
இன்னும் சில தினங்களில் இரண்டு படங்களுக்கும் முன் பதிவு தொடங்குகிறது.