கௌதம் வாசுதேவ் மேனனின் கண்டுபிடிப்பு நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோல். ஆனால் அதன் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாதான் ஹீரோயின். படம் ஹிட்டாக, இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று அழகாக உதட்டை பிதுக்கிக் காட்டுகிறார் இந்த பளிங்கு சிலை. அவருடன் ஒரு மினி பேட்டி.
கௌதமின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே...?
ஆமாம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்தேன். அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நான்தான் நாயகி. அப்புறம் நடுநிசி நாய்கள் படத்தில் சின்னதாக ஒரு வேடம் தந்தார். மீண்டும் இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஹீரோயின்.
இந்தத் தொடர் வாய்ப்புகளுக்கு என்ன காரணம்?
அதை நீங்கள் கௌதமிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் சிறந்த டைரக்டர். அவரது படங்களில் நடிப்பது கம்ஃபர்ட்டாக இருக்கிறது. ஆனால் காரணமே இல்லாமல் சிலர் என்னையும், அவரையும் இணைத்து காஸிப் எழுதுகிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது.
நன்றாக தமிழ் பேசுகிறீர்களே?
ஹலோ... நானும் தமிழ்ப் பொண்ணுதான். படித்ததும் வளர்ந்ததும் இதே சென்னையில்தான். அப்புறம் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர்னு தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். படிக்கிற போது விடுமுறையில் இதிலுள்ள ஏதாவது ஒரு ஊர்லதான் இருப்பேன். எங்களுக்கு இந்த ஊர்களிலெல்லாம் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.
நீங்கள் நடிக்கிற நீதானே என் பொன்வசந்தம் படத்தைப் பற்றி...?
முதலில் அந்த டைட்டில். எனக்குப் பிடிச்ச வைரமுத்து சாரோட பாடலின் முதல்வரியைதான் கௌதம் தலைப்பா வச்சிருக்கார். அவருக்கும் வைரமுத்துசார்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தில் நான் நித்யா என்கிற கேரக்டரில் வர்றேன். நானும் ஜீவாவும் காலேஜ் ஸ்டூடண்ட். நல்ல நண்பர்கள். எங்கள் நட்பு எப்படி காதலா மாறுகிறது என்பதுதான் கதை. தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படத்தை எடுக்கயிருக்கிறார் கௌதம்.
இந்த மூன்றிலும் நீங்கதானே ஹீரோயின்?
ஆமா. தமிழில் ஜீவா ஹீரோ. தெலுங்கில் நானி. இந்தியில் ஆதித்யா. ஒரே கதைன்னாலும் வேற வேற ஹீரோக்களுடன் நடிப்பதால் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக ஃபீல் பண்றேன்.