நடிப்பு: ரமணா, ரீச்சா சின்ஹா, தேவதர்ஷினி, முத்துக்காளை
இசை: ஏகே ரிஷால் சாய்
தயாரிப்பு: ஜிபிஎஸ்
எழுத்து - இயக்கம்: சம்பத் ஆறுமுகம்
பிஆர்ஓ: நெல்லை அழகேஷ்
கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி 'அடடே யார் இந்த புதிய இயக்குநர்?' என கேட்க வைத்த படம் மகான் கணக்கு.
திறமைசாலியாக இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போராடும் இளம் நடிகர்களில் ஒருவரான ரமணாவுக்கு, இந்தப் படம் ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும் வாய்ப்பு உள்ளது.
கதை மிகவும் வித்தியாசமானது. இதுவரை எந்த இயக்குநருக்கும் வராத துணிச்சல். அதற்காக முதலில் அறிமுக இயக்குநர் சம்பத் ஆறுமுகத்தைப் பாராட்டுவோம்.
தனியார் வங்கிகளில் நுகர்வோர் கடன், வாகனக் கடன் பெற்று கட்ட முடியாமல் அவதிப்படுவோர், கடன் அட்டை வாங்கிவிட்டு அவமானப்பட்டு நிற்பவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இந்தப் படம் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.
ரூ 2 லட்சம் கடனுக்காக தனியார் வங்கியின் டார்ச்சரால் குடும்பத்தையே இழந்து தவிக்கும் ரமணா, ஓஸிஓஸி வங்கி என்ற நிறுவனத்திடம் ரூ 360 கோடி கடன் பெறுகிறார். ஆனால் தன் பெயரில் அல்ல, தெருவில் போகிற பிச்சைக்காரர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்களை போலி ஆவணங்கள் கொடுக்க வைத்து. அந்தப் பணத்தை அவர் என்ன செய்கிறார்? வங்கி அதிகாரிகளிடம் மாட்டினாரா? என்பதெல்லாம் சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.
இந்த மாதிரி கடன்களையும், அட்டைகளையும் தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏன் தருகின்றன, அப்படி தந்த பின் மக்கள் படும் பாடு என்ன, இதை எப்படித் தடுக்கலாம் என ஒவ்வொரு கேள்விக்கும் அழுத்தமான பதிலைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அவரது இந்த முயற்சிக்கு நூறு சதவீதம் சின்சியராக உழைத்திருக்கிறார் ஹீரோ ரமணா.
குறிப்பாக இடைவேளைக்குப் பின் மகான் கணக்கு, மகா விறுவிறுப்பு. க்ளைமாக்ஸில், நீதிமன்ற விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ரமணா சொல்லும் பதில்களையும், அவரது வழக்கறிஞராக வரும் பாஸ்கரன் எடுத்து வைக்கும் வாதங்களையும் இந்தியாவில் உள்ள அத்தனை தனியார் வங்கிகளும் நிச்சயம் கேட்டாக வேண்டும். வசனங்களில் அத்தனை புத்திசாலித்தனம், வேகம்.
பன்னாட்டு தனியார் வங்கிகள் இந்தியாவுக்குள் நுழைந்த விதம் பற்றிய விளக்கம் பலருக்கும் ஒரு eye opener என்றால் மிகையல்ல!
ரமணாவுக்கு இதை முதல் படம் என்று கூட சொல்லலாம். குடும்பத்தினரை இழந்து தவிப்பது, வங்கி அதிகாரிகளை ஏமாற்றி கடன் பெற அவர் கையாளும் உத்தி, வங்கி அதிகாரிகளை அவர் எதிர்நோக்கும் பாங்கு, க்ளைமாக்ஸில் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் விதம் என எல்லா காட்சியிலும் எந்த மிகைப்படுத்தலும் இல்லாத இயல்பான நடிப்பு. சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. கீப் இட் அப்!
ஹீரோயினாக ரீச்சா சின்ஹா நடித்துள்ளார். அவருக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
வங்கி அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, ஷர்மிளா, சிஇஓவாக வரும் சுரேஷ் அர்ஸ் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
நீதிமன்ற காட்சிகள் இயல்பாக இருந்தாலும், இவ்வளவு பெரிய மோசடியை ஒரு அமர்வு நீதிமன்றம் விசாரிப்பது போல காட்டியிருந்தால் நம்பகத்தன்மையோடு இருந்திருக்கும்.
இசை, பாடல்கள், ஒளிப்பதிவு போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், படத்துக்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.
சம்பத் ஆறுமுகத்தின் வசனங்கள் பெரும் பலம். அதேபோல, தனியார் வங்கி செயல்பாடுகள் குறித்து அவர் பெரிய ஆராய்ச்சியே செய்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.
சின்னச் சின்ன குறைபாடுகள் இருந்தாலும், ஒரு சரியான விழிப்புணர்வைத் தரும் முயற்சிகளில் ஒன்றாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் அவற்றைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. பாராட்டி வரவேற்கலாம்!