"இக்கரைக்கு அக்கரை பச்சை" என எண்ணும் நடுத்தர வயதுடைய குடும்பத்தலைவருக்கு, "இக்கரைக்கு அக்கரை பச்சை இல்லை..." என்பதை அனுபவ ரீதியாக உணர்த்தும் இளைஞனின் கதைதான் "மகாராஜா".
சாதாரண எல்.ஐ.சி., கிளார்க்காக வாழும் நாசருக்கு, தனது அறிவுக்கு ஏற்றபடி வாழ்க்கையை அனுபவிக்கும் உத்தியோகம் கிடைக்கவில்லை என்ற வருத்தம். அதன் வெளிப்பாடு, வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கும் இக்கால ஐ.டி., இளைஞர்களை
பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது மகா எரிச்சல்! இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரிட்டர்ன் ஆகி ஐ.டி., கம்பெனி ஒன்றில் உச்ச நிலையில், கை நிறைய சம்பளம் வாங்குவதுடன் குட்டி, புட்டி என சந்தோஷமாக இருக்கும் சகோதரி மகன் சத்யாவின் மூலம் ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைக்கிறது நாசருக்கு! விடுவாரா நாசர், எல்.ஐ.சி., வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஐ.டி., கம்பெனியில் ஐயக்கியமாகும் நாசர், குடும்பத்தை மறந்து கொட்டமடிக்கிறார். மற்றொரு பக்கம், ஹீரோயின் அஞ்சலி மூலம் கெட்ட பழக்கங்களை விட்டொழிந்து பொறுப்புள்ளவராக மாறுகிறார் ஹீரோ சத்யா. சத்யா திருந்த, நாசர் வருந்தினாரா...? இல்லையா...? என்பது மகாராஜா படத்தின் மீதிக்கதை! இந்த கதையை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ, அத்தனை வித்தியாசமும், விறுவிறுப்புமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் டி.மனோகரன்!
இயக்குநரின் எதிர்பார்ப்பை மட்டுமல்ல, ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பக்காவாக பூர்த்தி செய்திருக்கின்றனர் கதாநாயகர்கள் சத்யா, நாசர், நாயகியர் அஞ்சலி, அனிதா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் கருணாஸ், எம்.எஸ்.வி., உள்ளிட்ட எல்லோரும். இன்றைய அல்ட்ரா மார்டன் இளைஞர்களை பார்த்து ஏங்கும் நடுத்தர வயதுக்காரர்களின் பாத்திரத்தை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார் நாசர். ஐ.டி., இளைஞராக சத்யாவும் வாழ்ந்தே இருக்கிறார். கருணாஸ் காமெடியனாக மட்டும் இல்லாமல் கலக்கலான நண்பனாகவும் நம்மை கவருகிறார்.
டி.இமானின் பின்னணி இசையும், பாடல்கள் இசையும் படத்திற்கு பலம்! அதேமாதிரி லட்சுமிபதியின் ஒளிப்பதிவும், மகாராஜா-வுக்கு உறுதுணையாக உதவி செய்துள்ளதென்றால் மிகையல்ல!
இளைய தலைமுறையினரை பார்த்து பொறாமைபடும், நடுத்தர வயதுக்காரர்களின் ஏக்கத்தையும், வாய்ப்பு கிடைத்தால் எப்படியெல்லாம் அதை பயன்படுத்திக் கொண்டு அவர்களும் அத்துமீறுவார்கள் எனும் பாங்கையும் அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் டி.மனோகரன், அதை இன்னும் சற்றே லாஜிக் மீறாமல் சொல்லியிருந்தார் என்றால், "மகாராஜா" இன்னும் "பலே ராஜா"வாக இருந்திருக்கும்! அவ்வாறு இல்லாததால் "மகாராஜா" - "வெறும் ராஜா"! அவ்வளவே!!