வொய் திஸ் கொலைவெறிடி பாட்டு படு ஹிட்டாகிவிட்ட சந்தோஷத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் தனுஷ்.
ஆனால் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் தமிழ்க் கவிஞர்கள் இந்த கொலைவெறி பாடலைக் கண்டித்துப் பேசியிருந்ததைக் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பாரோ...
உடும்பன் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த மூத்த கவிஞர்களில் ஒருவரான, பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் பேசுகையில், " எனது தந்தை பாரதிதாசன், தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதித்தது இல்லை. இன்றைக்கு ஆங்கிலம், தமிழ் கலந்து பாட்டு எழுதுகிறார்கள். அதுபோன்ற பாடலை மக்கள் உங்களிடம் விண்ணப்பம் போட்டு கேட்டார்களா? மக்கள் இந்த பாடல்களை விரும்புகிறார்கள் என்பது அப்பட்டமான பொய். அறிந்தே நடக்கிறது இந்த கலாச்சார கொலை," என்றார்.
கவிஞர் அறிவுமதி பேசும்போது, "கொலை வெறிடி பாட்டு மெட்டில் பஞ்சாப் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் வந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலை வெறிடா என்ற பாடலை அதே மெட்டில் உருவாக்கி 'யூ' டியூப்பில் வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த பாடலை அதிலிருந்து அகற்றிவிட்டனர்" என்றார்.
தமிழையும், தமிழனையும் கொச்சைப்படுத்தும் பாடலாக கொலை வெறிடி பாடல் உள்ளது என்றார் கவிஞர் நா காமராசன் (ரஜினிக்காக சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு போன்ற அருமையான பாடல்களைத் தந்தவர்).
அப்துல் ரகுமான் பேசும்போது, 'நல்ல பாடல்கள் வந்த காலம் போய் “ஒய் திஸ் கொலை வெறி” பாடல் காலமாகி விட்டது' என்றார் வேதனையுடன்.