பனிக்காலம் வந்தாலே உடலில் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது சருமம்தான். முகம் முழுவதும் தேமல் போல வெள்ளையாக தோன்றி அழகையே கெடுத்துவிடும். அதேபோல கை, கால்களில் தோல்களில் வெடிப்பு ஏற்படும். வறண்ட சருமம் இருந்தாலோ வைட்டமின் சத்து குறைபாட்டினாலே இத்தகைய கோளாறுகள் ஏற்படுகின்றன. பனிக்காலத்தில் சருமத்தை
பாதுகாக்க ஆலோசனை தருகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு குளிர்காலத்தில் முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை உணர்வார்கள். பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. இதேபோல் ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
மேனி பளபளப்பு
ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி பளபளக்கும். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் பள பளப்பாகும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள்.
சுடுநீரில் எலுமிச்சை
அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.
தக்காளிப் பழச்சாறு
பனியால் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.