முதலீட்டுக்கு முன் யோசிக்க வேண்டியவை

எதிர்காலத்தேவைக்காக முதலீடு செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. பல்வேறு தரப்புகளில் முதலீடு செய்யும் வசதி இருந்தாலும் அந்த முதலீட்டுக்கு முன்பு நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவை பற்றிய விவரங்களை இந்த வாரம் காண்போம்.

கடன்களை திரும்ப செலுத்துங்கள் ( Pay return loans ):
உங்களுக்கு கடன் இருந்தால் முதலில் கடனை அடைத்து விட்டு முதலீட்டை தொடங்குங்கள். மேலும் அந்த கடனுக்கு நீங்கள் எவ்வளவு வட்டி செலுத்துகிறீர்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வட்டி விகிதம் அதிகம் இருந்தால் முதலில் அதை தீர்க்க வழிகாணுங்கள்.

அடுத்து உங்களிடம் ஏதேனும் சேமிப்பு இருக்கிறதா? சேமிக்க விரும்புகிறீர்களா? முதலில் யோசியுங்கள்! பின் சேமியுங்கள். என்னென்ன கடன்கள் இருக்கிறது; அவற்றை நீங்கள் எவ்வாறு கையாள போகிறீர்கள்? கடன்களை முதலில் திரும்ப செலுத்துங்கள். வட்டி சுமை குறையும். வட்டி வருமானம் தரும் மகிழ்ச்சியை விட வட்டி செலவு தரும் சுமை கடினமானது.

கிரிடிட் கார்டு கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள்( Credit card debt, do not be entangled );

இருக்கிற கடன்களை திரும்ப செலுத்துவதை விட புதிய கடன்களுக்குள், குறிப்பாக கிரிடிட் கார்டு கடன்களுக்குள், சிக்கிக்கொள்ளாமலிருப்பது புத்திசாலித்தனம். தேவையில்லாதவற்றைக்கூட வாங்கிக்குவிக்கும் போதையை தருவது இந்த கிரிடிட் கார்டு. அதிக விலையுள்ள பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் வாங்காமலிருப்பது நல்லது. கிரிடிட் கார்டு மூலம் எந்த ஒருபொருளும் வாங்கும் முன்பு அந்த பொருள் உங்களுக்கு மிகவும் அவசியம் தானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தேவை இல்லாத பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் வாங்கிவிட்டு பின்னர் கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

ஒருவேளை கிரிடிட் கார்டில் பொருள் வாங்குவதாக இருந்தால் அதற்குரிய தொகையை மாதம் தோறும் தவறாமல் செலுத்துங்கள். இதற்காக எளிய மாத தவணை முறைகளை பல கிரிடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதற்கு பதிலாக கிரிடிட் கார்டில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்தாதீர்கள். ஏனென்றால் கிரிடிட் கார்டு வட்டி பல குட்டிகள் போட்டு கழுத்தை இறுக்கும் அளவுக்கு வளர்ந்து விடும், ஜாக்கிரதை.

பாதுகாப்பு( Safety );

ஒரு முதலீட்டை செய்கிறவர்கள் அது ஈட்டித்தரும் வருவாய் குறித்து சிந்திக்கிற அளவுக்கு பாதுகாப்பு குறித்து யோசிப்பதில்லை. நமது முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்பது பற்றி சிந்தித்துப்பாருங்கள்; அது மிக முக்கியம். ஆபத்துக்களை எதிர் கொள்ளும் திறன் ஆளுக்கு ஆள் வேறுபடும். அதே போல் ஒவ்வொரு சேமிப்பு திட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு அம்சம் இருக்கும். உதாரணமாக, பங்கு முதலீட்டைக்காட்டிலும், வங்கி நிரந்தர வைப்பு நிதி அதிக பாதுகாப்பானது. எந்த அளவிலான இழப்பை உங்களால் சகித்துக்கொள்ள முடியும் என்பதைப்பொறுத்தே எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.

வரிச்சலுகை தரும் முதலீட்டுத்திட்டங்கள்( Tax-concession investment schemes );

வரிச்சலுகை பெற வேண்டிய நிலையிலிருக்கும் ஒருவர் அதற்கேற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது. அதை விடுத்து வரிச்சலுகையில்லாத திட்டங்களில் சேமிக்க தொடங்கினால், செலுத்த வேண்டிய வருமான வரி அதிகரித்து கிடைக்கும் வருவாயை வரியாக செலுத்த வேண்டியது வரும்.

அன்றாட பங்கு வர்த்தகத்தை தவிர்க்கப்பாருங்கள்( Try to avoid the daily stock trading );

பங்கு சந்தை வர்த்தகத்தில் தேர்ந்த நிபுணராக இல்லாத பட்சத்தில் அன்றாட பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் முதலீடு ஆபத்தில் முடியலாம். எனவே, உங்களது ஆபத்தை எதிர் கொள்ளும் திறனுக்கு பொருத்தமான வகையிலான அளவுக்கே பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுங்கள்.

மொத்தத்தில், முதலீடு என்பது சேமிப்பை ஏதோ திட்டத்தில் முதலீடு செய்வதென்பதல்ல. மேற்கண்ட் பலவேறு அம்சங்களையும் சீர் தூக்கிப்பார்த்த பின்னரே செய்ய வேண்டியது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget