சேமிப்பு, இன்சூரன்ஸ், எதிர்கால தேவைகள்(Savings, insurance, future requirements) என்று பல்வேறு அடிப்படையில் ஒவ்வொருவரும் பணத்தை சேமிக்கின்றனர். இந்த சேமிப்பின் ஒருவகையாக சிலர் பங்கு வர்த்தகம் (Stock Trading), மியூச்சுவல் பண்டு (Mutual Fund) , மற்றும் insurance திட்டங்களில் முதலீடு செய்வதுண்டு. சிலர் இந்த நிதி முதலீடுகளை கவனமாக கண்காணித்து வருவார்கள். சிலர் வருமான வரி (Income tax) நெருக்கடியை
தீர்க்க அந்த நேரத்தில் எந்த திட்டம் வசதியாக இருக்கிறதோ அதில் பணத்தை செலுத்தி விடுவார்கள். பின்னர் அதுபற்றி மறந்து போவதும் உண்டு.
எந்த திட்டத்தில் எப்போது சேர்ந்தோம் என்பது உங்களுக்கு மறந்து போகிறதா? அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவது எப்படி? என்பது போன்ற தகவல்களை இந்த வாரம் பார்க்கலாம்.
என்ன நடக்கிறது?
சிலர் வருமான வரி சலுகைகள் (Tax Concessions) பெறுவதற்காக, பங்கு முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (Equity linked mutual fund schemes) முதலீடு செய்வதுண்டு. இவ்வாறான முதலீடுகள் வருடத்திற்கொரு முறை வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80சி யின் கீழ் செய்யப்படுபவை. இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை 3 ஆண்டுகளுக்கு திரும்பப்பெற இயலாது (lock in period) என்ற நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கும். எனவே, முதலீடு செய்பவர்கள் அந்த முதலீடு குறித்த எந்த தகவல்களையும் முறையாக பாதுகாப்பதில்லை.
மேலும், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் (Mergers and Acquisitions) என்ற பெயரில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைகிற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்ட ஒன்று. நிறுவனங்களின் இணைப்புக்குப்பின் திட்டங்களின் பெயர்கள் மாறலாம்; அல்லது ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட திட்டங்களை இணைக்கலாம். அவ்வாறே, ஒரே பரஸ்பர நிதி நிறுவனமே கூட திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும் உண்டு.
இது போன்ற மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் பரஸ்பர நிதி நிறுவனங்கள், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மாற்றம் குறித்த தகவல்களை கடிதமாக அனுப்பி வைப்பது வழக்கம். இந்த மாற்றம் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் திட்டத்தில் தொடரலாம்; இல்லையெனில் அபராதங்கள் ஏதுமின்றி திட்டத்தை விட்டு வெளியேறலாம். அது உங்கள் விருப்பம்.
இனி என்ன செய்வது?
திட்டத்தில் நீங்கள் தொடர விரும்பினால், உங்களுக்கு வந்த அந்த தகவல் தொடர்பை கண்டிப்பாக பத்திரப்படுத்துங்கள். அதன்பின், உங்களுக்கு வரும் அனைத்து கடிதங்களும் திட்டத்தின் தற்போதைய, அதாவது புதிய பெயருடனேயே வரும்.
கடிதங்கள் காணாமல் போனால்….?
துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்களென்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் திட்டத்தின் பழைய பெயரிலுள்ள முதலீட்டு சான்றிதழோ (Investment Certificate) அல்லது கணக்குப்பட்டியலோ (Statement of Account) அல்லது ஏதாவது குறிப்புக்களோ கிடைத்தால், இணைய தளத்தில் அந்த பழைய பெயரை குறிப்பிட்டு தேடுங்கள், அநேகமாக இணையதளம் உங்களுக்கு உதவக்கூடும்.
ஒருவேளை இது பலன் தரவில்லை என்றால், நாட்டிலுள்ள 45 பரஸ்பர நிதி நிறுவனங்களையும் தேடி அலைவதை விடுத்து, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ், கார்வீ கம்ப்யூட்டர் ஷேர், பீ என் பி பரிபா நிதி சேவை போன்ற முக்கியமான பெரிய ஒரு சில பதிவாளர்களை (Registrars) அணுகுங்கள். அல்லது, அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் (Agents or Financial Consultants) விசாரித்துப்பாருங்கள். உங்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.
விலாச மாற்றத்தை தெரிவிக்கவும்
ஏதாவது ஒரு விலாசத்தில் குடியிருக்கும் போது முதலீடு செய்திருப்பீர்கள்; குடியிருக்குமிடமும் அலுவலகமும் மாறியிருக்கும்; அப்போதெல்லாம் உங்கள் முதலீடு உங்களை பின் தொடர்வதில்லை. ஏன்? முகவரி மாற்றத்தை நீங்கள் நிதி நிறுவனங்களுக்கு தெரிவிப்பதில்லை. உங்கள் முதலீட்டுக்கணக்கு பட்டியல் உங்களது பழைய முகவரிக்கே வந்து கொண்டிருக்கும்.
இதற்கு தீர்வு…..?
உங்கள் வாடிக்கையாளர்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் கே. ஒய். சி. (Know your customer K Y C) என்கின்ற கோட்பாடு இன்று அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி, உங்கள் முகவரி மாற்றத்தை தெரிவிக்கலாம். எனவே, உங்களது தகவல்களில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் கே.ஒய்.சி. தான் ஒரே வழி, மாற்றங்களை அறிவிப்பதற்கு.
மாற்றாக, மின்னஞ்சல் முகவரியை முதலீட்டுக்காக மனு செய்யும் போதே பதிவு செய்யுங்கள். அப்போது விடுபட்டிருந்தால், இப்போது கூட மேற்சொன்ன பதிவாளர்கள் இதற்கான வழிகளை ஏற்படுத்தி தர முடியும்.