நடிகை சோனியா அகர்வால் தனது தம்பிக்காக ஒரு இசை நிறுவனத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது கரங்களால் திறந்து வைக்க, சோனியாவின் முகத்தில் சகோதரின் சந்தோஷத்தைப் பார்த்துப் பூரண திருப்தி ததும்பியது.
சோனியா அகர்வாலின் தம்பி செளரப் அகர்வால். தம்பி மீது அதிக பாசம் கொண்டவரான சோனியா, தம்பியின் நீண்டநாள் ஆசையை சமீபத்தில் நிறைவேற்றி வைத்தார். அது ஒரு இசைப் பள்ளி. வாத்தியக் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிநிலையமாக இது விளங்கும். இதற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் சவுண்ட் கேரேஜ்.
இந்த இசை நிலையத்தை ஹாரிஸ் ஜெயராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை சோனா, நடிகர் ஆர்யா, நடிகர் அப்பாஸின் மனைவி எரும் அலி, நமீதா, பேஷன் டிசைனர் சிட்னி சிலேடன், டிவி நடிகை ரம்யா, டாக்டர் பிரியா செல்வராஜ், ரியாஸ் கான் என பெரும் பட்டாளமே கலந்து கொண்டு சோனியாவை உற்சாகப்படுத்தியது.
தற்போது 29 வயதாகும் சோனியா அகர்வால் 2002ம் ஆண்டு டி. ராமாநாயுடவின் கை பட்டு நடிகையானவர். பின்னர் தமிழுக்கு வந்த அவரை இயக்குநர் செல்வராகவன் தொடர்ந்து இயக்கி வந்தார். பின்னர் காதல் கொண்டு மணமும் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தும் போயினர்.
விவாகரத்துக்கு முன்பு வரை ரப்பர் பாதையில் போய்க் கொண்டிருந்த சோனியாவின் வாழ்க்கைப் பயணம் தற்போது கரடுமுரடனான சாலையில் போவதைப் போல மாறியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஒரு நடிகையின் வாக்குமூலம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு அவர் மாறத் தொடங்கியுள்ளார்.
வெப்பம் படம் மூலம் ரீ என்ட்ரியைத் தொடங்கிய சோனியா தற்போது மூன்று தமிழ் மற்றும் ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
தம்பிக்கு இசை பயிற்சி நிலையம் வைத்துக் கொடுத்தது குறித்து சோனியா கூறுகையில், சென்னையில் ஒரு இசைப் பள்ளியை நடத்த வேண்டும் என்பது எனது சகோதரனின் நீண்ட நாள் கனவு. ஒரு சகோதரியாக அதை நிறைவேற்றியுள்ளேன். சந்தோஷமாக இருக்கிறது. எனது சகோதரர் டிரினிட்டி காலேஜில் இசை பயின்றவர். தான் கற்றுக் கொண்டதை தற்போது மற்றவர்களுக்கும் கற்றுத் தரப் போகிறார் என்றார் புன்னகையுடன்.