தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்.