தமிழகத்தில் ''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்ற நிலை தான் உள்ளது. விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. பின்னர், மகசூலை எப்படி அதிகரிக்க முடியும்?.
தினசரி 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று சொன்னாலும், அது பல மணி நேரம் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் மின்வெட்டால் தினமும் ரூபாய் 400 கோடிக்கு உற்பத்திக்கு இழப்பு என்று அறிக்கை தருகிறார். கடனை வாங்கி விவசாயத்திலோ, தொழிலிலோ முதலீடு செய்து விட்டு மக்கள் தவிக்கின்றனர்.
பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிப்பதில் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில்களை துவங்கி விட்டு மின்சாரம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் திகைக்கின்ற அளவில் பரிதாப நிலைதான் ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்தும், அன்னிய நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் மூலதனம் போட்டு தொழில்களை துவங்குவதற்கு கூட மின்சாரப் பற்றாக்குறையால் தயங்குகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்பவர்கள் கூட வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாளும் பெருகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் முதல் மின்வெட்டே இருக்காது என்று முதல்வர் கூறினார். இப்போது அவர் அடுத்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றாக்குறை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மின்சாரமே கிடைக்காத சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்துவதற்கு ஜெயலலிதா அரசு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதுபற்றி பொது மக்களிடம் கருத்து கேட்கிறது.
கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொது மக்கள் ஆவேசப்படுவதும், அதிகாரிகள் பொது மக்களை சந்திக்க பயப்படுவதும், போலீஸ் காவலை வைத்துக் கொண்டுதான் பொது மக்கள் குறை கேட்கும் கூட்டங்களை நடத்த வேண்டி உள்ளது என்பதும் இன்றுள்ள தத்ரூபமான நிலைமை.
''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா?
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.