நடிப்பு: திலீப் ரோஜர், சனா, கீத்திகா, சுனில், செந்தில்
பிஆர்ஓ: செல்வரகு
ஒளிப்பதிவு: கிச்சாஸ்
இசை, எழுத்து, இயக்கம்: பாலன்
தயாரிப்பு: ஜெகந்நாதன் - மாடர்ன் சினிமா
தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடியிருக்கும் படம் உடும்பன். எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று, 'யாருப்பா இந்த இயக்குநர்?' என்று கேட்க வைத்திருக்கும் பாலனுக்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
ஹீரோவுக்கு (திலீப் ரோஜர்) தொழில் திருட்டு (அவர் குடும்பத்துக்கே அதான் தொழில்!). அதற்கு பார்ட்னர் ஒரு உடும்பு! ஒரு நாள் ஹீரோவும் உடும்பும் வழக்கம்போல திருடப் போகிறார்கள். இந்த முறை ஒரு போலீஸ் ஐஜி வீட்டுக்குப் போகிறார்கள்.
ஆனால் அங்கோ திருட ஒன்றும் கிடைக்கவில்லை. ஐஜியும் அவர் மனைவியும் தங்களிடம் இருந்த பணம், நகை அனைத்தையும் தனியார் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க இழந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நீ முகமூடி போட்டு கொள்ளையடிக்கிறாய்... தனியார் பள்ளிகளோ முகமூடியே போடாமல் பகல் கொள்ளை அடிக்கிறார்கள், என்று கதற... 'அடடா கொள்ளையடிக்க இது நல்ல ரூட்டாயிருக்கே' என்று மனசு மாறும் ஹீரோ, இருக்கும் பணத்தையெல்லாம் போட்டு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறான்.
ஆனால் அந்த நேரம் பார்த்து ஐஜி வீட்டில் திருட முயன்ற குற்றத்துக்காக சிறை செல்ல நேர்கிறது. அப்போதுதான் ஜெயிலிலிருந்து திரும்பும் தன் அண்ணனிடம் பள்ளியை ஒப்படைத்துவிட்டு சிறைக்கு செல்கிறான்.
சிறையிலிருந்து திரும்பி வந்து பார்த்தால், அவன் ஆரம்பித்த பள்ளி ஓஹோவென்று வளர்ந்து, மக்களிடம் நன்கொடை பிடுங்குவதில் நம்பர் ஒன்னாக நிற்கிறது. அண்ணன் பெரிய கல்வி வியாபாரியாகி, அடுத்து கல்லூரி ஆரம்பிக்கும் லெவலில் இருக்கிறான்.
ஆனால் தன் அண்ணன் ஏழைகளிடம் பெரிய அளவு பணத்தை பிடுங்கி அவர்களின் சாபத்துக்குள்ளாவதைப் பார்த்து, மனம் மாறுகிறான் ஹீரோ. அப்போதுதான் பள்ளிக்கூடம் பற்றி ஆய்வுப் படிப்புக்காக வரும் சனாவுடன் ஹீரோவுக்கு காதல் மலர்கிறது.
ஆனால் அந்தக் காதல் நிறைவேற சனா ஒரு கண்டிஷன் போடுகிறார். அது அனைவருக்கும் இலவசக் கல்வி. அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள், கொள்ளையடிக்கும் பள்ளிக்கு எப்படி கடிவாளம் போடுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
இன்றைய கல்வி முறையால் எந்த அளவு இந்த சமூகம் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் படம்.
'உடும்பைப் போட்டு கொள்ளையடித்து போலீசுக்கு ஷேர் கொடுத்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு மக்கள்கிட்ட புடுங்கினா சீக்கிரம் கோடீஸ்வரன் ஆகிடலாம்' என்பதுதான் நாட்டின் யதார்த்த நிலை. அதை கொஞ்சமும் தயக்கமின்றி, ஒளிவு மறைவின்றி சொல்லியிருக்கிறார்கள்.
குறிப்பாக வசனங்கள் ஒவ்வொன்றும் கல்விக் கயவர்களை நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் அளவுக்கு செம ஷார்ப். தனியார் பள்ளிகளில் இவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும், அவர்கள் மாணவர்களைப் பார்த்துக் கொள்ளும் லட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கொள்ளையர்களுக்கு பணம் கட்டி மாளாமல் ஒரு விவசாயி மாண்டே போவகு கண்களை கசிய வைக்கும் சோகம்!
ஹீரோ திலீப் ரோஜர். பைக் ரேஸ் வீரர். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார். ஹீரோயின்கள் சனா, கீந்திகா தங்கள் கேரக்டர்களைப் புரிந்து நடித்திருக்கிறார்கள்.
ஹீரோவின் அண்ணனாக வரும் சுனில் நடிப்பு சமயத்தில் மீட்டரைத் தாண்டிப் போகிறது. ஹீரோவின் அம்மா கம்பம் மீனா, நண்பனாக வரும் செந்தில் அனைவருமே மனதில் இடம்பிடிக்கிறார்கள்.
ஒரு படம் நம் பிரச்சினைகளைப் பேசினால் நம் மனசுக்கு நெருக்கமாகிவிடும். அதன் மற்ற குறைகள் கூட பெரிதாகத் தெரியாது. இந்த உடும்பன் கூட அப்படித்தான். படத்தின் இரண்டாம் பாதியில் தேவையற்ற சில பாடல்கள், லாஜிக் மீறல்கள், இது நக்கலா சீரியஸா என்று யோசிக்க வைக்கும் சில காட்சிகள் இருந்தாலும், உடும்பன் நம்மை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.
அரசுப் பள்ளியை தரமுயர்த்த மந்திரி வீட்டிலே கன்னக்கோல் வைக்கிறான் உடும்பன். கைத்தட்டலில் அரங்கம் அதிர்கிறது.
உடும்புக்கறி சாப்பிட்டு கல்விக் கொள்ளையன் இறக்க, அவனது மொத்த சொத்துக்களையும் அரசிடமே ஒப்படைக்கிறான் அதே உடும்பன். இதற்கும் கைத்தட்டல். மனித மனம் எத்தனை வினோதமானது பாருங்கள்!
கிச்சாஸ் ஒளிப்பதிவு, விடி விஜயன் எடிட்டிங் இரண்டும் படத்துக்கு பலம். இயக்குநர் பாலனே இசையமைத்துள்ளார். பாவேந்தர், பட்டுக்கோட்டையாரின் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
இன்றைய கல்விச் சூழலுக்கு எதிரான குரல்கள் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தாலும், அதை மக்களின் குரலாக மாற்றும் சக்தியும் வீச்சும் சினிமாவுக்கு மட்டும்தான் உள்ளது. உடும்பன் மாதிரி படங்களை மக்கள் ஆதரிப்பது, அவர்கள் பிள்ளைகளுக்கு நல்லது!