ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன.
இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா.
தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது.
நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.
ஆனால், உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.
ஆதரவளித்த நாடுகள்:
ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே
எதிராக வாக்களித்த நாடுகள்:
பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.
இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.
தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.