தென்னிந்தியாவின் கவர்ச்சி மிகு நாயகிகளில் ஒருவரான ரீமா சென் இன்று இல்லற பந்தத்தில் நுழைகிறார். இன்று மாலை நடைபெறும் திருமண விழாவில் ரீமா சென், தனது காதலரான ஷிவ் கரன் சிங்கை கரம் பிடிக்கிறார். மின்னலே படம் தமிழ் ரசிகர்களின் மனதில் மின்னலாகப் பாய்ந்தவர் ரீமா சென். அதன் பின்னர் திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் தனது
அபாரமான நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
நீண்ட காலமாக தனது உறவினரும் பப் உரிமையாளருமான ஷிவ் கரன் சிங்கை காதலித்து வந்தார். இதுகுறித்து கிசுகிசுக்கள் வந்தபோதெல்லாம் அதை தொடர்ந்து மறுத்து வந்தார். சமீபத்தில்தான் தனது காதலையும், திருமணத்தையும் அவர் உறுதி செய்தார்.
சமீபத்தில் இவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் நிச்சயம் செய்தனர். இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு டெல்லி அருகே உள்ள ஷிவ் கரன் சிங்குக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.
இதில் இரு வீட்டுக்கும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்திலிருந்து நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட ரீமாவுக்கு நெருக்கமான சிலர் பங்கேற்கின்றனர்.