சினிமா ரசிகர்கள் அனைவரும் மாதுரி தீக்ஷித்தின் சிரிப்பிற்கும் ரசிகர்கள் தான். இந்தி பட உலகில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் தீக்ஷித் ஐந்து பிலிம் ஃபேர் அவார்டுகளையும் வாங்கியுள்ளார். இந்திய அரசிடம் பத்மஸ்ரீ விருது பெற்றதே மாதுரி தீக்ஷித்தின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. இப்போது பத்மஸ்ரீ விருதை விட பெரிய அந்தஸ்தை பெற்றுள்ளார் மாதுரி தீக்ஷித். லண்டனில் உள்ள மெடாம் துஸ்ஸௌட்ஸ் என்ற மெழுகு மியூசியத்தில் திரை நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்களால் பெரிதும்
நேசிக்கப்படுபவர்களின் மெழுகு சிலை வைக்கப்படும்.
இந்த மியூசியத்தில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன், சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி திரையுலக நட்சத்திரங்களுக்கு சிலை வைக்கப்பட்டிருந்தது. இப்போது அவர்களுடன் மாதுரி தீக்ஷித் இணைந்துள்ளார்.
இதை பற்றி மியூசியத்தின் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் மாதுரி தீக்ஷித் “ லண்டன் மியூசியத்தில் எனது சிலை வைக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நான் சிலிர்த்துவிட்டேன். அவர்கள் என்னை இவ்வளவு அழகாக படம் பிடித்தது தான் ஆச்சரியமான விஷயம். மற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த ஹீரோக்களின் சிலையுடன் என் சிலை இருப்பது பெருமையான விஷயம்” என்று பூரித்திருக்கிறார் 44 வயது நடிகை.
இந்த மெழுகு சிலையை வடிவமைக்க துவங்கியதிலிருந்தே மாதுரி தீக்ஷித் உடனிருந்திருக்கிறார். அந்த மெழுகு சிலைக்கு உடுத்த தனது பிங்க் நிற சேலையை மியூசியத்திற்குஅளித்துள்ளார் மாதுரி. இந்த சிலை 1,50,000 பவுண்ட்ஸ் செலவு செய்யப்பட்டு 4 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.