திரைப்பட உதவி இயக்குநர் ஜெயகுமார், தான் பார்த்து ரசித்த ஹாலிவுட் திரைப்படமான "ரெகீம் ஃபார் எ ட்ரீம்' படத்தைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார். "நாம் நம்முடைய வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு அடிமையாகிறோம். அப்படியில்லாமல் நம்மால் வாழ முடியவில்லை. நல்ல விஷயம் என்பது கூட நாள்பட பழக்கமாகி அடிமை முறைக்கு ஒப்பாக மாறுகிறது. எத்தனையோ பிரச்னைகளை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட ஒரு அடிமைத்தனம்
பற்றி ஃபெüண்டன் த ரெஸ்லர் எடுத்த படம்தான் "ரெகீம் ஃபார் எ ட்ரீம்'.
"கனவின் இறுதி ஊர்வலம்' எனப் பொருள்படும் இந்தத் திரைப்படம், மூன்று பேர் அடிமைப்படுவதனால் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது. மூன்று காலங்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கதை மாந்தர்களின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பது திரையில் விரிகிறது.
முதலில் கோடைக்காலம். ஒரு விதவை. அவளுக்கு ஒரு மகன். இருவரும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தனியாக வாழ்கிறார்கள். தாய் எந்த நேரமும் டிவியில் "கேம் ஷோ' பார்த்தபடியே இருக்கிறாள். அவளது மகன் எந்த வேலையும் இல்லாமல் தன் காதலியோடும், நண்பர்களோடும் ஊர் சுற்றித் திரிகிறான். காசு இல்லையென்றால் வீட்டில் இருக்கும் டிவியை அடகு வைத்து போதை மருந்து, ஊசி வாங்கி காதலி மற்றும் நண்பர்களுடன் அதற்கு அடிமையாகிறான்.
ஒருநாள் தொலைபேசியில் "கேம் ஷோ'வில் கலந்து கொள்ள தாய்க்கு அழைப்பு வருகிறது. விண்ணப்பத்தையும் அனுப்பி வைக்கிறாள். மகன் கொஞ்சம் பணம் திரட்டி போதை மருத்துகளை விற்கத் தொடங்குகிறான். அதில் நிறைய பணம் கிடைக்கிறது. அவன் எதிர்காலம் பற்றி கனவு காண்கிறான்.
இப்போது இலையுதிர் காலம். தாய் மருத்துவரிடம் மருந்து வாங்கி உட்கொள்கிறாள். அவை முறையான மருந்து அல்ல. "ùஸடேட்டிவ்' மாத்திரைகள் . அதனால் சிறிது காலத்தில் அவள் மூளை பாதிப்படைகிறது. இல்லாத காட்சிகளை காண்கிறாள். அறையின் மூலையில் இருக்கும் ஃபிரிட்ஜ் அவளைத் துரத்துவதாக காண்கிறாள். இன்னும் அவளுக்கு கேம் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. மகனின் நண்பன் ஒரு கொலையில் மாட்டுகிறான். அவனைக் காப்பாற்ற நிறைய பணம் செலவாகிறது. இதனால் போதை மருந்து கிடைப்பதில் தடை ஏற்பட, இருவருக்கும் சண்டை நடக்கிறது.
காலம் இப்போது பனிக்காலம். நண்பர்கள் மூவரும் பணம் சம்பாதிக்கலாம் என்று ஃப்ளோரிடா செல்கின்றனர். மகனுக்கு போதை ஊசி குத்தி குத்தி கை மோசமாகிவிடுகிறது. இன்னொருவன் தனிமைக்கு ஆளாகிறான். காதலியை காசுக்காக பாலியல் தொழில் செய்ய வைத்து விடுகிறான். காதலி போதை மருத்துக்கு அடிமை என்பதால், மூளையில் உதிக்கும் புதுப்புது எண்ணங்களின் பாதிப்பால் தாங்க முடியாத வேதனைக்கு ஆளாகிறாள்.
தாய் உச்சபட்ச மன அதிர்வுக்கு ஆளாகி, அந்த டிவி நிறுவனத்துக்கே சென்று வாய்ப்பு தருமாறு அழுகிறாள். அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நெஞ்சை உலுக்கும் விதமாக சொல்லிச் செல்கிறது படம். படத்தை பார்த்து முடித்த போது, நாம் அதிர்ந்து போகும் மனநிலைக்கு ஆளாகிறோம். அண்டர்ஸ்டேட்மெண்ட் எண்றுதான் அதைச் சொல்லவேண்டும். இப்படம் சில நாள்களுக்கு அதைப்பற்றியே சிந்திக்க வைத்தது. அந்த அளவிற்கு நம்மை கலக்குகிறது. இவை எதுவும் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் அல்ல. தினந்தோறும் நடக்கக்கூடியவைதான். சில விஷயங்களுக்கு அடிமையாகி சிதைந்து போவதை அழுத்தமான திரைக்கதையால் சொல்கிறது படம். கொஞ்சம் குழப்பமான திரைக்கதை போல இருந்தாலும், இப்படத்துக்கு இது தேவை என்பதை நம்மால் உணர முடிகிறது.
மொத்தத்தில், இப்படத்தை இயக்கியவர் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் நிரூபிக்கும் படம் இந்த "ரெகீம் ஃபார் எ ட்ரீம்'.''