புதுமுகங்கள் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ரேணிகுண்டா. அசால்ட்டாக செய்யும் கொலைகள், அடிதடிகள், நண்பர்களின் சேர்க்கை, பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு புது களத்தை கையில் எடுத்து கொண்டு புதுமுக இயக்குநர் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் பன்னீர்செல்வம். இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது.
இவர்கள் கூட்டணியில் 18வயசு என்ற படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி நாம் கேட்டறிந்த சில தகவல்கள் இதோ...
18 வயசு படம் ஒரு சைக்கோ த்ரில்லர் நிறைந்த கதை. படம் பார்ப்பவர்களை அங்கும், இங்கும் நகரவிடாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை த்ரில்லிங்காக உருவாக்கி இருக்கிறாராம் டைரக்டர். அதோடு ஒரு மெல்லிய காதல் கதையும் உண்டாம். குழந்தைகளை ஒழுங்கா வழி நடத்தணும், சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த படத்தில் உண்டு.
படத்தின் ஹீரோ ஜானி தோன்றும் காட்சிகளுக்கு எல்லாம் நிச்சயம் கைத்தட்டல் உண்டு என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்தஅளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார். படத்தில் மிருகத்தின் அசைவுகளையும், மனிதர்களின் இயல்புகளையும் படத்தில் வைத்துள்ளனர். மிருகத்தின் உணர்வுகள் அந்த ஹீரோவுக்குள் வந்து அடித்து நொறுக்கும் காட்சிகளை அற்புதமாக செய்திருக்கிறார் ஜானி. தேனியில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் 8 நாட்களாக எடுக்கப்பட்டது. அதில் உயிர் கொடுத்து சண்டைகாட்சியில் மிரட்டி இருக்கிறார் ஜானி. மாட்டின் உணர்வு மனிதனுக்குள் வந்தால் எப்படி அடித்து நொறுக்குமோ அதைப்போல இரண்டு முழங்கால் மற்றும் தலை மூலம் சண்டை போட்டுள்ளார் ஜானி. இதனால் தலை நரம்பில் ஜானிக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாம். இருந்தும் அந்த வலியையும் பொறுத்து கொண்டு சூட்டிங்கில் நடித்தாராம். சூட்டிங் முடிந்த பின்னரே மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.
சினிமாவில் வலி இல்லாமல் வெற்றி கிடைப்பதில்லை. அப்படி ஒரு பெரும் வெற்றி 18 வயசு படம் மூலம் ஜானிக்கு காத்திருக்கு என்றே சொல்லலாம்.