தனது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எடுத்தால் சென்சாரிடம் போராட வேண்டியிருக்கும் என்பதால் ஆங்கிலத்தில் படம் எடுக்கப்போகிறேன், என்று நடிகை சோனா கூறியியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாகவும் குத்தாட்டம் ஆடுபவராகவும்தான் பார்க்கிறார்கள். உண்மையில் நான் யார்... என் கேரக்டர் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அதை தெரிய வைக்கப் போகிறேன்.
என் படம் ‘த டர்டி பிக்சர் போல் ஒருபோதும் இருக்காது. அந்தப் படம் கோழைத்தனத்தை பிரதிபலித்தது. அதன் நாயகி தற்கொலை செய்து கொள்வார். ஆனால் நான் அப்படி இல்லை துணிச்சலான பெண். எனது திரையுலக அனுபவங்கள், நான் சந்தித்த நபர்கள், என்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன். சில இருட்டு ரகசியங்கள் படத்தில் இருக்கும்.
என்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். உண்மையில் நான் யார்? என்பதை இப்படம் வெளிப்படுத்தும். இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் கதை இருக்கும். ஆங்கிலத்தில்தான் படத்தை எடுக்கிறேன். வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய காட்சிகள் இடம் பெறும் என்பதால் இங்குள்ள தணிக்கை குழுவிடம் போராட வேண்டியிருக்கும். ஆங்கிலத்தில் எடுத்தால் இந்த பிரச்சினைகள் ஏற்படாது. எனவே ஆங்கிலத்தில் படத்தை எடுக்கிறேன். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை பற்றிய விவரங்களை வெளியிடுவேன், என்று கூறியுள்ளார்.