அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையே, எக்ஸ்ட்ரா சதையோ இல்லாமல் பிட்டாக மாறியுள்ளார். அஜீ்த்தை விமர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார்.
ஆனால் இன்னொரு பக்கம், இந்த விமர்சனத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என நினைத்தாரோ என்னமோ.. ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார். அடுத்து ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாராவுடன் தான் நடிக்கும் படத்துக்காகத்தான் இத்தனை பயிற்சிகளும்.
இந்தப் படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜீத்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணு வர்தன், அஜீத் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் அனுப்பியுள்ளார்!
அந்தப் படங்களில் அஜீத்தின் உடல் ப்ளாட்டாக, ஃபிட்டாக உள்ளது. விமர்சகர்கள் கிண்டலடிக்கும் தொப்பை கூட போயே போச்! விட்டால் சிக்ஸ் பேக்குடன் வந்து நின்றாலும் நிற்பார் மனிதர்... வெற்றியும் தோல்வியும் கலைஞர்களின் ஆர்வத்தை பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!