இந்தக் கொரியன் படத்தை முக்கியமான திரைப்படம் என்றோ, கலையின் ஏதாவது ஒரு உச்சிக் கிளையை ஆட்டியது என்றோ சொல்ல முடியாது. ரசிகனை குறி வைத்து எடுத்த ஒரு கமர்ஷியல் பதார்த்தம்தான் இது. இதே கதைக்களத்தில் தமிழில் கூட பல படங்கள் வந்துள்ளன. முக்கியமாக அந்நியன், எவனோ ஒருவன். ஓகே. இப்போது கதை எந்த மாதிரி என்பது புரிந்திருக்கும். அந்நியனில் ஹீரோ நேர்மையாக இருப்பான். அப்படியில்லாதவர்களை கொலை செய்வான்.
இதற்கு மாரல் சப்போர்ட் தருவதற்கு சின்ன வயதில் இறந்து போன தங்கை, இரக்கமற்ற கார் ஓனர், சோம்பேறியாக தாய் தந்தையை கொடுமைப்படுத்தும் மகன் என்று எதிர்தரப்புக்கு நம்பியாரின் சாயம் கொஞ்சம் அதிகமாகவே பூசப்பட்டிருக்கும். பிக் பேங்க் இயக்குனருக்கு இந்த பெயின்ட் அடிக்கிற வேலையெல்லாம் இல்லை. அந்தவகையில் எவனோ ஒருவனுக்கு சற்று நெருக்கமான படம். ஆனால் அதைவிட ஷார்ப் அண்ட் க்யூட்.
நமது ஹீரோ ஒரு நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில் மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள்.
என்ன?
டைவர்ஸ்.
நமது ஹீரோ அதிர்ந்து போகிறான். ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?
நீ எதுவுமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு.
வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காருக்கு சொந்தக்காரனுக்கு ஃபோன் போட்டால் வெளியூரில் இருப்பதாக பதில் வருகிறது. பஸ் பிடித்து வியர்வையில் குளித்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்சரியம். ஹீரோ இதுவரை லேட்டான சரித்திரம் இல்லை.
அடுத்த இரண்டாவது நிமிடம் உயரதிகாரி பக்குவமாக அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகாரி. அவனது கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். லட்சம் கோடியில் கொள்ளையடித்த மந்திரிகள் நம்மிடம் வந்து நேர்மையாக இருக்கணும் என்று உபதேசித்தால் அடி வயித்திலிருந்து ஒரு கோபம் வருமே... ஹீரோவுக்கும் வருகிறது.
இயக்குனர் Jeong - Woo Park-யிடம் பிடித்த விஷயம் ஒரே தடத்தில் பயணிக்காமல் அடுத்தடுத்த கட்டங்களுக்குள் கதையை நகர்த்தி சென்றிருப்பது. தெருவில் ஒன்றுக்கு இருந்ததற்காக ஹீரோவை போலீஸ்காரன் காவல் நிலையத்தில் உட்கார வைக்கிறான். சின்ன விஷயம், போலீஸ்காரனின் வீம்பால் படிப்படியாக பூதாகரமாகிறது. அதிலும் என்னை கைது செய் என்று அடாவடியாக போலீஸ்காரர்களுக்கே இனிமா கொடுக்கும் அந்தக் கிரிமினல். நடிப்பில் அள்ளுகிறார்.
படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று கிரிமினலின் பிளாஷ்பேக். அவன் ஒரு கிரிமினல் அல்ல, அப்படி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவன். சென்டிமெண்ட் துருத்தலாக இல்லாமல் கதையுடன் இந்த திருப்பம் ஆப்டாக பொருந்துவதுடன் கதையை நகர்த்திச் செல்லவும் பயன்படுகிறது. இன்னொன்று அதிகார வாக்கம் இவர்கள் மீது படிப்படியாக தீவிரவாதி முத்திரையை குத்தும்விதம். கூடங்குளம், நக்சல் போராட்டம் என அரசுக்கு எதிரான எல்லா மக்கள் போராட்டங்களிலும் அதிகாரம் இந்த வழிமுறையையே கடைபிடிக்கிறது. உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் போது நீங்கள் செய்த இயல்பான விஷயங்களும் உங்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாற்றப்படும். ஆல்பர் காம்யூ தனது அந்நியன் நாவலில் இதனை நுட்பமாக பதிவு செய்திருப்பார். அந்த நாவலின் நாயகன் தனது அம்மாவின் இறுதிச் சடங்கின் போது இரண்டு கப் காபி குடித்ததுகூட இன்னொரு வழக்கில் அவன் ஒரு மோசமான ஆள் என சித்தரிக்க பயன்படுத்தப்படும்.
தீவிரவாதிகளின் வன்முறையைவிட அதிகாரத்தின் வன்முறை கொடூரமானது. தீவிரவாதிகளின் வன்முறை ஒரு குற்றச்செயல். அவர்கள் குற்றவாளிகள். ஒரு சராசரி மனிதனாக இந்த சமூகத்தில் அவர்களால் நடமாட முடியாது. அவன் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம். ஆனால் அதிகாரத்தின் வன்முறையில் வன்முறையாளர்கள் குற்றவாளிகளாகவோ, அவர்களின் செயல் குற்றச்செயலாகவோ மதிப்பிடப்படுவதில்லை. அவர்கள் ஹீரோக்களைப் போல் சமூகத்தில் உலவுகிறார்கள். பதவிகளும், விருதுகளும் அவர்களை தேடி வருகின்றன. வீரப்பன் முதல் சமீபத்திய வங்கிக் கொள்ளை என்கவுண்ட்டர் வரை நினைவுப்படுத்திப் பாருங்கள். உடனே சிலர் அவர்கள் குற்றவாளிகள் என அதிகாரத்தின் தரப்பை பரிந்து பேசலாம். ஆனால் இதில் முக்கியமானது, குற்றவாளிக்கு மறுக்கப்படும் நீதி நாளை நிரபராதிக்கும் மறுக்கப்படலாம் என்பதே. மேலும் இதுவரை நடந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட அனைவரும் கொலை செய்யும் அளவுக்கு குற்றம் புரிந்தவர்கள் என யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது.
இந்த அதிகாரத்தின் வன்முறை இந்தப் படத்தில் ஆழமாக முன் வைக்கப்படுகிறது.
படத்தின் இறுதியில் ஹீரோ, தான் கடத்தி வைத்திருக்கும் அரசியல்வாதியின் மகனுடன் கார் ரேஸில் கலந்து கொள்கிறான். ஹீரோ ரேஸராக வேண்டும் என விரும்பியவன். அந்த ஆசை அவனது அப்பாவால் மூர்க்கமாக மறுக்கப்படும். அந்த ஆசை எவ்வளவு தூரம் அவனுள் அடக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த இறுதிக் காட்சியில் நாம் உணர்கிறோம். இத்தனைக்கும் அவனது கார் ரேஸ் ஆசை படத்தின் ஆரம்பத்தில் சில விநாடிகளே வந்து போகும். அதையும் இறுதிக் காட்சியையும் இயக்குனர் முடிச்சிட்டிருக்கும் விதத்தில் அவனது ஆசையின் அழுத்தத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
முன்பு சொன்னது போல் இதுவொரு கமர்ஷியல் படம்தான். அதையும் தாண்டி சில விஷயங்களை ரசிக்க முடியும். குறிப்பாக நேர்மையற்ற உலகில் நேர்மையாக வாழ முயற்சிப்பவனுக்கு உலகம் அளிக்கும் பெயர் வாழத் தெரியாத பைத்தியக்காரன் என்பதையும் இப்படம் தெளிவாக்குகிறது. இந்தியாவுக்கு சாலப் பொருத்தமான கருத்து.