பிரச்சனை என்பதற்குப் பதில் பிசாசு என்றும் வைத்துக் கொள்ளலாம். அலோன் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட ஒரு பேய் படம்.வெளிநாட்டுப் படங்களை சுட்டு எடுப்பதில் கே.வி.ஆனந்தும் அவரது டீமும் டாக்டரேட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பல படங்களிலிருந்து சுட்டு ஒட்டுப் போடுவதால் தப்பித்துவிடலாம் என்ற அவர்களின் ரகசிய பிளானும் கடந்த இரு படங்களில் எடுபடவில்லை. இணையத்தின் ஜேம்ஸ்பாண்டகள் கண்டு பிடித்துவிட்டார்கள். சரி, மாற்றானுக்கு வருவோம்.
இந்தப் படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடிக்கிறார் என்று படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே பத்திரிகைகள் ஸ்கூப் வெளியிட்டன. அதனை கே.வி.ஆனந்த் திட்டவட்டமாக மறுத்தார். அதெல்லாம் சும்மா என்றார். ஆனால் பாருங்கள்... அவர்கள் வெளியிட்ட டீசரிலேயே இது பொய் என்பது தெரிந்துவிட்டது. அடுத்தப் பிரச்சனை அலோன்.
இந்த தாய்லாந்து படத்தில் இரு சகோதரிகள் ஒட்டிப் பிறந்திருப்பார்கள். அவர்களை பிரிக்க நடக்கும் அறுவை சிகிச்சையில் ஒரு சகோதரி இறந்துவிடுவாள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று உயிரோடு இருக்கும் சகோதரி தனது பழைய வீட்டிற்கு திரும்ப வருவாள். அப்போது இறந்து போனவள் பேயாக வந்து பயமுறுத்துவாள்.
இந்தக் கதையைதான் கே.வி.ஆனந்தும் டீமும் மாற்றானாக சுட்டிருக்கிறது என்று பேச்சு. பிரஸ்மீட்டிலும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இரு படங்களுக்கும் சம்பந்தமில்லை என்றார் கே.வி.ஆனந்த்.
சம்பந்தம் இருக்காது என்று நமக்கும் தெரியும். சூர்யா போன்ற ஹீரோ நடிக்கும் படத்தில் பேய், பிசாசு என்றா எடுப்பார்கள். அலோனின் லைனை கொஞ்சம் மாற்றிப் போட்டு, வில்லன் ஒரு சூர்யாவை போட்டுத் தள்ளுவதாகவும், இன்னொரு சூர்யா அதற்கு பழி வாங்குவதாகவும், நடுவில் சமூகப் பிரச்சனையை செருகி அடையாளமே தெரியாதபடி மாற்றுவார்கள். இதுதான்க கதை என்று சொல்லவில்லை. இதேபோன்ற ஒன்றாக இருக்கும்.
சம்பந்தமில்லை என்று சொன்னாலும் அலோன் ஒரு பிசாசைப் போல் மாற்றானை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது.