ஹீரோ தமனுக்கு தான் வாழும் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் த்ரில்லாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். எந்த பரபரப்பும் திருப்பமும் இல்லாமல் வாழும் வாழ்க்கை மீது வெறுப்பு உண்டாகிறது. ஒரு நாள் குடிபோதையில் கடவுளிடம், ‘எனக்கு த்ரிலிங்கான வாழ்க்கை வேண்டும். எதிர்காலத்தில் நடப்பதை முன்னக்கூட்டியே அறியும் சக்தி வேண்டும்’ என்று கேட்க, கடவுளும் அவனுடைய ஆசையை நிறைவேற்றுகிறார்.
வியாபாரத்தில் ஏற்பட்ட தோல்வியால் கடனில் மூழ்கியிருக்கும் ஹீரோவின் அண்ணன் கொல்லப்படுகிறார். அண்ணனுக்கு கடன் கொடுத்த தாதா, தமனிடம் வசூலுக்கு வருகிறார். அப்பாவுக்கு நெஞ்சு வலி. அத்தை மகளின் திருமணம் தடைபட்டு இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்படுகிறது. இவர் காதலிககும் பெண் ஏமாற்றிவிட்டு சென்று விடுகிறாள். இப்படியாக தமனின் வாழ்க்கை பரபரப்பாக போகிறது.
கடைசியில் கொலைகாரனாகவும் ஆகிறார். ‘கடவுளே நீ கொடுத்த பரபரப்பு வாழ்க்கை போதும். என்னால் தாங்க முடியலை. சும்மா விளையாட்டுக்குத்தானே கேட்டேன்’ என்று கதற, எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிகிறது.
கடவுள், கனவு சமாசாரத்தை விட்டுவிட்டு பார்த்தால் வழக்கமான கதைதான். அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை மூன்று மாதம் தன்னிடம் அடியாளாக வேலைபார்க்க சொல்லும் தாதா கேரக்டர் புதிது. அதை மகாநதி சங்கர் அற்புதமாகச் செய்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பூட்டுகிறது. ஆனால் அவர் கேரக்டரை காமெடியாகவும் இல்லாமல், சீரியசாகவும் இல்லாமல் குழப்பி வைத்திருக்கிறார்கள்.
ஹீரோவின் நண்பர்கள் சிரிக்க வைக்கிறார்கள். அதுவும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் வைத்து ரகளை செய்யும் காட்சிகள் காமெடியின் உச்சக்கட்டம். பணக்காரவீட்டு பெண் ரீத்துவுடன் தமன் காட்டும் நட்பு, கவிதை. ‘டேய் ஏற்கனெவே ஒருத்தனால நான் மனசு புண்பட்டிருக்கேன். நீயும் என்னை காதலிச்சு தொலைக்காதே’ என்று எச்சரிக்கும் ரீத்து, தமனின் பணத்தேவைக்காக கடத்தல் நாடகம் போட்டு, பணக்கார தந்தையிடம் பணம் கறந்து விட்டு காதலனுடன் எஸ்கேப் ஆவது எதிர்பாராத திருப்பம்.
தமன், அத்தை மகள் ஐஸ்வர்யாவை விரும்புகிறாரா இல்லையா என்பதில் குழப்பம். தமன், ஐஸ்வர்யா, ரீத்து ஆகியோர் தங்களின் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
தீபக் பகவத்தின் ஒளிப்பதிவும், கணேஷ் ராகவேந்திராவின் இசையும் கதையின் தேவைக்கேற்ப அமைந்திருக்கிறது.
புதுமையான கதையை யோசித்திருக்கும் இயக்குனர் ஹர்ஷவர்தன் அதை சினிமாவாக தருவதில் சற்று தடுமாறி இருக்கிறார்.