இந்த வாரம் நான்கு நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன. மிரட்டல், ஆசாமி, மதுபானக்கடை மற்றும் யுகம் ஆகியவைதான் அந்த நான்கு படங்கள். இவற்றில் மிரட்டல் மற்றும் மதுபானக்கடை இரண்டும் ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் என்ற பெயரில் நேற்றே வந்துவிட்டன. மிரட்டல் படத்தை மாதேஷ் இயக்கியுள்ளார். வினய், பிரபு, சந்தானம், சர்மிளா நடித்துள்ள இந்தப் படம், ஒரு தெலுங்கு ரீமேக். மீடியா ஒன் குளோபல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை ப்ரவீண் மணி.
நேற்று வெளியான இன்னொரு படம் மதுபானக் கடை. சின்ன பட்ஜெட் படம்தான். குடிகாரர்களுக்காக குடிகாரர்களால் உருவாக்கப்பட்ட படம் என்ற அறிவிப்புடன் வந்துள்ள மதுபானக் கடை படத்தின் இயக்குநர் கமலக் கண்ணன். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
யுகம்...
இன்று வெளியாகும் இரு படங்களில் ஒன்று யுகம். யாரோ ஒருவன் போகிற போக்கில் பண்ணும் இரு போன்கால்கள் கணவன் - மனைவியைப் பாடாய் படுத்தும் கதை. புதுமுகங்கள் ராகுல் மாதவ், தீப்தி ஹீரோ ஹீரோயின்கள். பொன்ராஜ் இசையமைத்துள்ளார். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் பவன்சேகர் இயக்கியுள்ளார்.
ஆசாமி
போலிசாமியார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இந்த ஆசாமி. கடந்த வாரமே பத்திரிகையாளர்களுக்கு காட்டிவிட்டாலும், இந்த வாரம்தான் வெளியிடுகின்றனர். படத்தில் பீரடித்துவிட்டு குறிசொல்லும் போலிச்சாமியார்களில் ஒருவராக ஷகிலா நடித்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அம்மன் பாட்டுக்கு, பத்திரிகையாளர் காட்சியில் படம்பார்த்த படக்குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கே சாமி வந்து ஆடினர்!
இந்த நான்கு படங்கள் தவிர, இந்தியில் பெரும் பரபரப்பு கிளப்பியுள்ள ஜிஸ்ம் 2-ம் அதிக அரங்குகளில் வெளியாகிறது சென்னை நகரில்.
ஹாலிவுட்டின் பிரமாண்ட வெளியீடான டோடல் ரீகாலும் இன்றுதான் வெளியாகிறது.