தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வரும் செப்டம்பர் 30ம் தேதி நடத்த உள்ள வி.ஏ.ஓ. தேர்வுக்கு, நேற்று வரை, 7.8 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வரும் 10ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள். வருவாய்த் துறையில், 1,045 வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப, செப்டம்பர் 30ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் முதல் வாரத்தில், டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் அறிவித்தது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிய இன்னும் நான்கு நாள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று வரை, 7.8 லட்சம் பேர் பதிவு செய்ததாக, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கி விட்டதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய நிலை எழவில்லை எனவும், அவர் தெரிவித்தார். நான்கு நாட்களில், மேலும் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.