தலைப்பைப் படித்துவிட்டு கன்னா பின்னா கற்பனைகளுடன் மேட்டருக்குள் வராதீர்கள். விரைவில் வரவிருக்கும் ஒரு படத்தில் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் 'பாடி'க்கு விஞ்ஞான ரீதியில் உயிர்கொடுக்கும் விஞ்ஞானியாக மூத்த நடிகர் விஎஸ் ராகவன் நடித்துள்ளாராம்! பாபா சினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், மூன்று பொம்மை நாய்கள் ஆக்ஷன் ஹீரோக்களாக நடித்துள்ளன. பகலெல்லாம் பொம்மைகளாக அலமாரியில் இருக்கும் இந்த மூன்று நாய்களும் இரவில் ஆக்ஷன் ஹீரோக்களாக
மாறி எதிரிகளைப் பழி வாங்குகின்றன.
பொம்மை நாய்கள் எப்படி ஆக்ஷன் ஹீரோக்களாக மாறுகின்றன, ஏன் பழி வாங்குகின்றன என்பதை இயக்குனர் எஸ்.எஸ். பாபா விக்ரம் குழந்தைகளும் ரசிக்கிற விதத்தில் சொல்லியுள்ளாராம்.
இந்த பாபா விக்ரம் யார் என்று தெரிகிறதா..? கருணாநிதி கதை வசனம் எழுதி கண்ணம்மா என்று ஒரு படம் வந்ததே... அந்தப் படத்தின் இயக்குநர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் எல்லாம் இவரே.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. காரணம், மறைந்த பாடகி சொர்ணலதா பாடிய கடைசி பாட்டு இது.
பட்டுச்சேலை வாங்கித் தாரேன் வாம்மா...
ஒரு பவுன் நகை வாங்கித் தரேன் வாம்மா...
- என புஷ்பவனம் குப்புசாமி பாட பதிலுக்கு
பட்டுச்சேலை தேவையில்லை மாமா
ஒரு பவுன் நகையும் தேவையில்லை மாமா
மஞ்சத்தாலி ஒண்ணுபோதும் மாமா
- என சொர்ணலதா பாடியுள்ளார்.
இந்தப் பாடலுக்காக ஏவிஎம்மில் பெரிய கடைவீதி செட் போட்டு குறவன் - குறத்தியாக கருணாஸும் கோவை சரளாவும் ஆட, நடனக் கலைஞர்களுடன்
30 ஜோடி நிஜ குறவன் - குறத்திகளும் ஆடியுள்ளனர்.
பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டாமல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வி.எஸ். ராகவன் பொம்மை நாய்களுக்கு உயிர் கொடுக்கும் விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாபிலோனாவை சிலர் கொன்றுவிட, அந்த உடலுக்கு ராகவன்தான் உயிர்தருகிறாராம்!
ராதாரவி, நாசர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், பாண்டு, சூர்யகாந்த், சாம்ஸ், ஆர்த்தி, கிரேன் மனோகர், ஜாகுவார் தங்கம், டெல்லி கணேஷ், மும்பை மாடல் ப்ரியா, மைசூர் மாடல் காயத்ரி, பத்து வயது இளம் நட்சத்திரம் கண்ணம்மா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.