ஆசிரியர் என்பதற்கு அர்த்தம் புனிதம். வருங்கால சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்குவது ஆசிரியர்களே அதனால்தான் ஆசிரியர்களை இறைவனுக்கு சமமாக போற்றி வணங்குகின்றனர். குழந்தையின் மீது பெற்றோர்கள் காட்டும் அக்கறையை விட ஆசியர்கள்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். அத்தகையை சிறப்பு வாய்ந்த ஆசிரியப்பணியை சிறப்பித்தவர்களைப்பற்றி ஆசிரியர் தினம் கொண்டாடும் வேளையில் அறிந்து கொள்வோம்.
கீதாஞ்சலி நாயகன் ரவீந்திரநாத் தாகூர்
நமக்கு தேசிய கீதத்தை அளித்த ரவீந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. இலக்கியவாதியாக இருந்து கீதாஞ்சலியை உலகிற்கு அளித்த அவர் மிகச்சிறந்த பள்ளி ஒன்றை சாந்திநிகேதனில் நிறுவினார். அதில் குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கற்பித்தார். பள்ளியாய் தொடங்கப்பட்ட சாந்திநிகேதன் இன்றைக்கு இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது.
சாதனையாளர் கலிலியோ
சூரியனை மையமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என்பதை உலகிற்கு வெளியிட்ட கலிலியோ, 1564 ம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். இவர் தனது சாதனை வாழ்க்கையை பேராசிரியராக துவக்கினார். 1589 ல் பைசா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராக பணியைத் தொடங்கினார். அந்த சூழ்நிலையிலும் விடாமல் ஆராய்ச்சி செய்து 1609 ல் தொலை நோக்கியை கண்டறிந்தார். பின்னர் தொலைநோக்கியின் திறனை அதிகரித்து ஜூபிடர், சனி, வீனஸ், கோள்களை கண்டறிந்தார்.
ஐசக் நியூட்டன்
புவியீர்ப்பு விசை மற்றும் ஈர்ப்பு விசை பற்றிய கோட்பாடுகளை வெளியிட்ட ஐசக் நியூட்டன், கடந்த 1642 ம் ஆண்டில் டிசம்பர் 25 ல் பிறந்தார். பள்ளிப்பருவத்தில் இருந்தே ஆய்வை தொடங்கிய அவர், கணிதவியலில் பட்டம் பெற்றார். பல பல்கலைக்கழங்களில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்த அவர் 1665ல் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார். அப்பொழுதுதான் புவியீர்ப்பு விசை மற்றும் ஈர்ப்பு விசை கோட்பாடுகளை வெளியிட்டார். வர்ணங்களைப் பற்றியும் வானவில்லைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும், சார்புத்துவக் கோட்பாடுகளை கண்டறிந்தவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. 1909 ம் ஆண்டு பேராசிரியராக தனது வாழ்க்கையை துவங்கிய ஐன்ஸ்டீன் பல்வேறு நாட்டு பல்கலைக்கழகங்களின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தார். கடினமான ஆசிரியப்பணிக்கு இடையேயும், சார்பு கோட்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் இவருடைய சேவையைப் பாராட்டி அறிவியல், மருத்துவம், தத்துவத்துறைகளில் டாக்டர் பட்டம் அளித்தன.1921 ல் சார்பு கோட்பாடு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்.
ஆசிரியர் தினம் கொண்டாடும் வேளையில் உலகின் தலைசிறந்த ஆசிரியர்களை நினைவுகூர்வதில் பெருமை கொள்வோம்.