வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்து வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.
ஜோதிடம் என்பது வீடு கட்டுவதை பொருத்தவரை ஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்ற கணிப்பு. நல்லநாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டுமென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் ஒன்றி வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.
வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.
* அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.
* சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி, ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.
* தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது சற்று நல்லது.
* செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வெள்ளி, திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.
பூமி பூஜை செய்வதற்கு உகந்த இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வடகிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
* தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.
* மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வட கிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவதுக் கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடிநீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்து விடக்கூடாது.