நெல்லை மாவட்டத்தில் அம்மா, அப்பா, அவர்களுக்கு ஒரு மகன், மகள் என சந்தோஷமான வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு கீழ் வீட்டில் விபச்சாரம் செய்யும் ஒருத்தி குடியேறி விடுகிறாள். அங்கு வருகிறவர்கள் எல்லோரும் ஹீரோவின் வீட்டிற்கு அடிக்கடி மாறி வந்துவிடுகிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்கிறார்கள். ஆனால் சில மணி நேரத்திலேயே வெளியே வந்து ஹீரோவின் அம்மாவை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு
போகிறார் விபச்சாரம் செய்பவள். இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேறு வீடு பார்த்து போய்விடலாம் என்ற எண்ணத்தில் வேறு வீடு பார்த்து குடி போகிறார்கள். அந்த வீட்டில் ஏற்கனவே தீவிரவாதிகள் இருந்தனர் என்பதால் அவர்களை என்கவுன்டர் செய்ய வரும் போலீசார் தவறுதலாக ஹீரோவை சுட்டுவிடுகின்றனர்.
அதன் பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது அவன் தீவிரவாதியல்ல என்று. உடனே, அவனை தீவிரவாதியாக காட்டுவதற்காக ஒவ்வொரு காட்சிகளாக அரங்கேற்றுகிறது காவல்துறை. ஆனால், சுடப்பட்ட அவனோ மருத்துவமனையில் உயிர் பிழைத்துவிடுகிறான். இருந்தாலும், போலி என்கவுன்டர் என்ற பிரச்சினையில் சிக்கிவிடாமல் தப்பிப்பதற்காக அவனை தீர்த்துக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் போலீசார் காய்களை நகர்த்துகின்றனர். அவர்களிடம் இருந்து ஹீரோ எப்படி தப்பிகிறான் என்பது க்ளைமேக்ஸ்.
தன்னை கொல்ல அலைபவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் முயற்சியிலும், தனது அக்காவின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்கும் எண்ணத்திலும் தனது முகபாவணைகளை ஒருங்கே செய்திருக்கிறார் ஹீரோ ரோகித்.
ஹீரோவின் அக்கா காயத்ரி கேரக்டரில் நடித்திருக்கும் மேகா நாயர். துறுதுறு பெண்ணாக வரும் இவர் தனது தம்பி ஹீரோவுடன் அடிக்கடி சண்டை போடுவதும், கிண்டல் செய்வதுமாக இவர் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை தன்வசப்படுத்திவிடுகிறார்.
லஷ்மி ராமகிருஷ்ணன் டாக்டராக வருகிறார். சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமான கேரக்டர்தான். மயில்சாமி ஜவுளி கடைகார அண்ணாச்சியாக வருகிறார். இவரது கேரக்டரும் சில காட்சிகள்தான்.
போலீஸ்கார வில்லனாக வருகிறார் தயாரிப்பாளர் தேனப்பன். யாருக்கும் தெரியாமல் ஒரு குடும்பத்தையே நடத்தும் இவர், ஹீரோவை ஓட ஓட துரத்தும்போது ஹீரோவை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களையும் பயமுறுத்துகிறார்.
பத்திரிகையாளர் தேவராஜ் ஜெயிலில் பெரிய ‘தலை’. ஜெயிலுக்குள் இவர் கேட்பதெல்லாம் கிடைக்கிறது. இவர் பேசும் வசனங்கள் முகம் சுழிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கிறது.
படத்தை இயக்கியிருக்கும் நவீனுக்கு இது முதல் படம். போலீஸ்காரர்கள் ஹீரோவை சுடுவது, பின்பு அவர் உயிரோடு இருக்கிறார் என்பது தெரிந்ததும், அவனை கொலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அலையும் போலீஸ்காரர்கள், என படத்தில் நிறைய இடங்களில் சஸ்பென்ஸுக்கு பஞ்சமில்லாத காட்சிகள் இருந்தாலும், திக் திக் என இருந்திருக்க வேண்டிய காட்சிகள்கூட சாதாரணமாய் வந்து போகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை சீரியல் கதை போல நகர்த்தியிருப்பது பலவீனம்.
சந்தோஷமான குடும்பம் குறித்த முதல் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு தேவையான அளவுக்கு இருக்கிறது.
மொத்தத்தில் ‘நெல்லை சந்திப்பு’ காட்சிகளில் கவனம் செலுத்தியிருந்தால் சாதித்திருக்கும்.