சீரியல்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை மாற்றிய கதைபோய் இப்பொழுதெல்லாம் கதாநாயகியை கூட மாற்றிவிடுகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொடரான பைரவியில் நடித்து வந்த சுந்தரா டிராவல்ஸ் ராதாவிற்குப் பதிலாக தற்போது இரண்டு வாரங்களாக சுஜிதா நடித்து வருகிறார். ஆவிகள் தொடர்பான கதைதான் பைரவி. இதில் பைரவியாக நடிக்கும் கதாநாயாகியின் கண்களுக்கு மட்டுமே ஆவிகள் தெரியும்.
திடீரென மரணித்தவர்கள் தங்களி இறப்பிற்கான காரணத்தை கூறி அதற்கு பைரவியின் மூலம் தீர்வு காண்பார்கள். இரவு நேரம் என்றாலும் சிறுவர்கள் கூட இந்த சீரியலை விடாமல் பார்த்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்த ராதாவிற்குப் பதிலாக சுஜிதா நடித்து வருகிறார். என்ன ஆச்சு ராதாவிற்கு என்ற சீரியல் தயாரிப்பாளர்கள்தான் விளக்கம் தரவேண்டும். ஒருவேளை ஆவி சீரியலில் நடித்தது அலர்ஜி ஆகிவிட்டதோ என்னவோ.
ஆவிகளைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு சின்னப் பெண்ணாக இருக்கும் சுஜிதா ஆவிகளுடன் பேசுவது கொஞ்சம் சிரிப்ப வரவழைத்தாலும் ஆவியாக நடிக்கும் ராகவியின் கண்கள் கொஞ்சம் பயத்தைதான் வரவழைக்கிறது.
இதே போலத்தான் ஜெயா டிவியில் காதம்பரி தொடரில் முன்பு நடித்து வந்த மிதுனாவிற்கு பதிலாக இப்பொழுது ஹர்ஷா நடித்து வருகிறார். சின்னத்திரையில் இப்பொழுது ஆளை மாற்றுவதெல்லாம் சகஜமப்பா என்கின்றனர் இயக்குநர்கள்.