அன்று... முருங்கைகாய், தமிழ் சினிமாவால் பிரபலமானது. இன்று நியூயார்க்கில் எடுக்கப்பட்டுள்ள ஒரு குறும் படத்தால் தோசை பிரபமலாகப் போகிறது. தமிழ்நாட்டின் பிரபலமான உணவான தோசையைத் நியூயார்க் நகரில் தேடி அலைந்ததை விவரித்து ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் இந்தியரான அம்ரித் சிங் இந்த படத்தைத்
தயாரித்து, நடித்து, இயக்கியுள்ளார். இவருடன் ஹிமன்சு சூரி, ஆனந்த் வில்டர், ஜாஸ் கலைஞர் விஜய் அய்யர், அசோக் கொண்டபாலு ஆகிய அமெரிக்காவாழ் இந்தியர்களும், மெக்சிகோவில் பிறந்த பலோமா, பெர்சியன் அமெரிக்கரான ரோஸ்டம் பாட்மங்லிஜி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இவர்களுக்கான தோசை விவரங்களை நியூயார்க் அஞ்சப்பர் உணவகம் வழங்கியுள்ளது. இந்த குறும்படம் இந்த வாரம் வெள்ளி, சனி மற்றும் திங்கள் கிழமைகளில் புரூக்லின் நிடேஹாக் சினிமாவில் திரையிடப்பட உள்ளது. நகைச்சுவைக்குப் பிரதான முக்கியத்துவம் அளித்துள்ள இந்த படத்தின் மூலம் தமிழக உணவு வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்த குறும்படத்தைத் தயாரித்து, நடித்துள்ள அம்ரித் சிங் ஒரு பேட்டியில் கூறியதாவது: கடந்த ஓராண்டாக இந்த படத்திற்காக உழைத்து வருகிறேன். தற்போது அமெரிக்காவில், குறிப்பாக நியூயார்க்கில் தென் இந்திய உணவு வகைகள் பிரபலமாகி வருகின்றன. இருப்பினும் தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள தோசை குறித்து, இங்குள்ளவர்கள் இன்னும் சரிவர அறிந்து கொள்ளவில்லை. எனவேதான் இந்த படத்தைத் தயாரித்துள்ளளேன். இந்த படம் திரையிடப்படும்போது, பார்க்க வருபவர்களுக்கு தோசை வழங்கப்படும், என்றார்.