பெண்ணிய நோக்கில் படம் எடுப்பதாக எத்தனையோ பெண் இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் உணர்வை, மனநிலையை ஒருவரும் உண்மையாக பிரதிபலித்ததில்லை. அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கௌரி ஷிண்டே விதிவிலக்கு. முதல் முறையாக மிக அழகான, உணர்வுப் பூர்வமான படைப்பைத் தந்திருக்கிறார். ஒரு அழகான ரோஜா செண்டுடன் அவரை வரவேற்போம்!
மிக எளிமையான கதை. பாலச்சந்தர் அல்லது பாலுமகேந்திரா படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட வகை பாத்திரம்தான். கதையோட்டம் கூட சில இடங்களில் எதிர்ப்பார்த்த மாதிரியேதான் உள்ளது. ஆனால் இதை எல்லாம் மீறி நம்மைக் கட்டிப் போடுகிறது படமாக்கப்பட்ட நேர்த்தி.
ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்துக்காக கணவனிடமும் மகளிடமும் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்தித்து மனதுக்குள் வெம்பும் ஒரு மனைவி, தாய்.. அந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீண்டு, தனக்கான மரியாதையை மீட்டெடுப்பதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.
படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அல்லது ஒரு பாத்திரம் அறிமுகமான அடுத்த நிமிடத்தில் மனதுக்குள் விழுந்து, நமக்குள்ளேயே பயணிக்கிற ரசாயனம்தான் இந்தப் படத்தின் ஸ்பெஷல்!
இன்னொன்று... ஸ்ரீதேவி. முகத்தில் முதுமையின் வரவு கையெழுத்திட்டிருந்தாலும், அந்த உறுத்தல் ஒரு சில நிமிடங்கள்தான்... ஷசியை ரசிக்க, அவரோடு அமெரிக்கா செல்ல, இங்கிலீஷ் கற்க, கிடைக்காத மரியாதைக்கான ஏக்கத்துக்காக அவருடன் கண்ணீர் சிந்த நாமும் தயாராக நிற்கிறோம். வெல்கம் பேக்!
மிகப்பெரிய திருப்பத்துக்கான காரணங்கள் என்று நாம் நினைப்பதைக் கூட, ஜஸ்ட் ஒரு பார்வையில், ஒரு இறுக்கமான பாவத்தில் அல்லது ஒரு சிரிப்பில் உணர்த்தும் அந்த அழகியலுக்காக கௌரி ஷிண்டேவுக்கு இன்னுமொரு ரோஜா.
படத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது இரண்டு நிமிடங்களே வரும் அஜீத். வாவ்... என்ன ஒரு இயல்பான, தன்னம்பிக்கை தரும் நடிப்பு. நிச்சயம் அந்த வேடத்துக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது. ஹேன்ட்ஸம் தல!
ஒவ்வொரு பாத்திரமும் அப்படியே மனதுக்குள் விழுந்து அழுத்தமான தடயங்களாகிப் போகிறார்கள்.
குறிப்பாக ப்ரியா ஆனந்த். பெண் மனசு பெண்ணுக்குத்தான் புரியும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் பாந்தமான நடிப்பு. மனதை வருடும் அழகு.
ஸ்ரீதேவியின் கணவனாக வரும் அதில் ஹூஸைன், நண்பராக வரும் மேதி, அந்த இங்கிலீஷ் ட்யூஷன் டேவிட், பாகிஸ்தானி இளைஞன் என அனைவருமே இயல்பாக பொருந்திப் போகிறார்கள்.
க்ளைமாக்ஸில் ஸ்ரீதேவி நிச்சயம் பேசுவார் என்பது தெரிந்து விடுகிறது. அதற்காக அவர் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவது போல காட்டாமல், இயல்பாக பேச வைத்திருப்பது இன்னும் நம்பகத்தன்மையைத் தருகிறது.
அமித்ரி தேவின் பின்னணி இசை இதமான வருடல். லஷ்மன் ஷின்டேவின் ஒளிப்பதிவு, அமெரிக்காவை காதலிக்க வைக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக் கொண்டு நாட்டை, நகரத்தை குப்பைத் தொட்டியாக வைத்திருக்கும் இந்தியர்கள் நிச்சயம் வெட்கித் தலைகுனிய வேண்டும். தன் மண்ணை உண்மையாக நேசிப்பவன் அதை அழகாக சுத்தமாக வைத்திருப்பான்!
வசனங்கள் எளிமை, ஆனால் வலிமை.
ஒரு உதாரணம்:
"ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்கா போய் எப்படி சமாளிப்பாய்?"
"நீ தமிழ் தெரியாமல் தமிழ்நாட்டில் எப்படி சமாளிக்கிறாயோ அப்படி!!"
பெண் இயக்குநர்களுக்கு புதிய கவுரவத்தை தேடித் தந்திருக்கிறார் கௌரி ஷின்டே!