முன்னாள் பிரபஞ்ச அழகியும், இந்திய நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 36 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் ரெனீ, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை திருமணம் பற்றி வெளிப்படையாக பேசாத சுஷ்மிதாசென் தற்போது தனது திருமணம் பற்றி சீரியசாக பேச தொடங்கி உள்ளார். அரியானா மாநிலம் குர்காவனில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் சுஷ்மிதாசென் கலந்து கொண்டார்.
திருமணத்தின்போது, கிறிஸ்தவ மணப்பெண் அணியும் உடைபோல், அவரும் ஆடை உடுத்தி மேடையில் தோன்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிறிஸ்தவ மத முறைப்படி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது சிறுவயது கனவாகும். நான் எப்போதும் கிறிஸ்தவ மணப்பெண் போல் என்னை கற்பனை செய்து கொள்வேன். கிறிஸ்தவ திருமணங்களை பார்த்து எனக்கும் அதுபோன்ற ஆசை ஏற்பட்டது.
எனவே கிறிஸ்தவ மத முறைப்படி உடை அணிந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம் எனது தந்தையின் விருப்பப்படி இந்திய பாரம்பரிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்வேன்.
தற்போது திருமணம் பற்றி சீரியசாக சிந்தித்து வருகிறேன். அநேகமாக அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம். எனது 16 வயதில் மாடலிங் தொழிலை தேர்வு செய்தேன். 3 ஆண்டில் அது எனக்கு போரடித்து விட்டது. எனவே சினிமா துறைக்கு மாற முடிவுசெய்தேன். சினிமாவில் இருந்தாலும் மாடலிங் தொழிலை மிகவும் நேசிக்கிறேன். அதில் எனக்கு சுதந்திரம் கிடைக்கிறது. மாடலிங் துறையில் உள்ள பழைய டிசைனர்கள் மற்றும் தோழிகளுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுஷ்மிதாசென் முன்பு டைரக்டர் மூடாஸார் அஜிஸ், நடிகர் ரந்தீப் ஹுடா ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். சமீபத்தில் பேரீச்சம் பழ வியாபாரி இம்தியாஸ் கத்ரி உடன் கிசுகிசுக்கப்பட்டார்.