ஆழ்கடல் சிறிய லைப் போட். அதில் பை, ரிச்சர்ட் பார்க்கர் என இரண்டு பேர். இதில் பை என்பது இளைஞன், ரிச்சர்ட் பார்க்கர் எப்போது வேண்டுமானாலும் பை மீது பாய்ந்து அவனை பைசல் செய்துவிடக் கூடிய பெங்கால் புலி. யான் மார்ட்டல் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக்கியிருக்கிறார் ஆங்க் லீ. பை தனது பெயர்க்காரணத்தை கூறுவதிலிருந்து பை என்பது யார் அவரது பின்னணி என்ன என்று கதை விரிகிறது. பை யின் தந்தை (அதுல் ஹசன்) மிருககாட்சி சாலை ஒன்றை
நடத்துகிறார். அரசிடமிருந்து உதவி கிடைக்காததால் மிருகங்களை வெளிநாட்டில் விற்றுவிட்டு கனடாவில் செட்டிலாகும் நோக்கத்துடன் மிருகங்களுடன் கப்பலில் பணக்கிறது பை யின் குடும்பம். திடீரென்று ஏற்படும் புயலில் கப்பல் கவிழ, சிறிய லைஃப் போட்டில் பை மட்டும் தப்பிக்கிறான். கூடவே ரிச்சர்ட் பார்க்கரும்.
நட்ட நடு கடலில் மனிதனுக்கும், மிருகத்துக்கும் ஏற்படும் போட்டியும், பரஸ்பரம் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பும் மிகையில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆங்க் லீ.
படத்தின் ஆரம்பத்தில் வரும் பாண்டிச்சோp காட்சிகளில் உத்தேச இந்தியாவை காண்பிக்கும் எத்தனிப்பு தெரிகிறது. குறிப்பாக ஆன்மீகத்தைப் பற்றிய சித்தரிப்பு. ஆனால் அதைவிட பை யின் பெயர்க்காரணமும், புலிக்கு ரிச்சர்ட் பார்க்கர் பெயர் வந்ததற்கான காரணமும் சுவாரஸியம். சின்ன படகின் ஒரு முனையில் பை யும் இன்னொரு முனையில் புலியும் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்த பிறகு அவர்களுக்குள் ஏற்படும் புரிதலை நுட்பமாக காட்சிப்படுத்தியிருப்பது அருமை.
ஆனால் படத்தின் ஆன்மா என்றால் அது விஷுவல்தான். பரந்த கடலும், இரவு நேரத்தில் வழியும் வண்ணக் குழம்புகளும் அற்புதமான அனுபவத்தை தருகின்றன. குறிப்பாக திமிங்கலம் திடீரென்று குதிக்கும் காட்சி. அதேபோல் மாமிசம் உண்ணும் தாவரங்கள் நிறைந்த தனித்தீவு.
இளைஞன் பை யாக வரும் சூரஜ்சர்மா, பை யின் அம்மாவாக வரும் தபு, நடுத்தர வயது பை யாக வரும் இர்பான் கான் என அனைவரும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள். இவர்களில் கிளாஸ் என்றால் அது அதுல் ஹசனும், இர்பான் கானும்தான். ரிச்சர்ட் பார்க்காpடம் விடைபெறும் பொருட்டு ஒரு தாங்க்ஸ் சொல்லியிருக்கலாம் என்று கண்கலங்குமிடத்தில் இர்பான் கான் தானொரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.
படகில் இருக்கும் வரிக்குதிரை, குரங்கு, கழுதைப்புலி எப்படி காணாமல் போனது என்பது ஒன்றுதான் படத்தின் ஒரே நெருடல். புலி தின்றிருந்தாலும் கணிசமான பகுதி படகில் இருக்க வேண்டுமே?
மற்றபடி பரந்த கடலும், அலைக்கழிக்கும் புயலும், பொங்கிவரும் இசையும், இவற்றுக்கிடையில் தத்தளிக்கும் இரு ஆன்மாக்களும் அப்படியே நம்மை ஆகர்ஷிக்கின்றன. படத்தின் முழுமையான அனுபவத்துக்கு கண்டிப்பாக 3டி யில் பாருங்கள்.