Winged Creatures (2008) சினிமா விமர்சனம்

ஒரு துப்பாக்கியோடு ஒரு பொது இடத்துக்குள் நுழைவது, சும்மா எழுந்தமாதிரியாக கொஞ்சப்பேரைச் சுட்டுக்கொல்வது, பிறது தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்வது, இது கிட்டத்தட்ட ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது வட அமெரிக்காவில் இப்போது! இப்படியான ஒரு சம்பவத்தில் மாட்டி உயிர் தப்பும் ஐந்து பேரின் வாழ்வினை பின்தொடருகின்றது இந்தப் படம். சிறுமி Anne (Dakota Fanning) தனது அப்பாவோடு காப்பிக் கடைக்கு வருகின்றாள்.
இவர்களோடு இணைந்து கொள்வது Anne’இன் நண்பன் Jimmy (Josh Hutcherson). கடையில் விற்பனைப் பெண் Carla (Kate Beckinsale); கடையின் இன்னோர் ஓரத்தில் தனக்கு புற்றுநோய் என்று அறிந்ததால் வாழ்க்கை வெறுத்து இருக்கும் Charlie (Forest Whitaker). வழமையான ஒரு காலைப் பொழுது. திடீரென ஒருவன் துப்பாக்கியோடு நுழைகின்றான். கடையில் இருக்கும் ஆட்களை ‘டப், டப்’ என்று போட்டுத்தள்ளுகின்றான். Anne’இன் அப்பா உட்பட பலர் இறந்து போக, தப்பிப் பிழைப்பவர்கள் மேலே கூறப்பட்ட நான்கு பேர்கள் மட்டுமே. இவர்களுடன் கடையிலிருந்து கண நிமிடத்திற்கு முன்னே புறப்பட்ட ஒரு வைத்தியன் Bruce (Guy Pearce). இதில் ஆகக் கொடுமை, Bruce கடையைவிட்டு வெளியேறும்போது, அந்த கொலையாளிக்கு கடையின் கதவைத் திறந்து விட்டது! இந்த கொடிய நிகழ்வின் பின்னர் இந்த ஐவரின் வாழ்வும் தலைகரணமாக மாறிவிடுகின்றது. Anne தீடீரென தீவிர பக்திவசப்பட்டுவிடுகின்றாள்; Jimmy பேசுவதை நிறுத்தி விடுகின்றான்; Carla நிஜ வாழ்வுடன் ஒட்டவே முடியாது, தனது கைக்குழந்தையையும் கவனிக்க முடியாது தவிக்கின்றாள்; ஒரு சின்ன துப்பாக்கிச் சன்ன உரசல் காயத்துடன் தப்பும் Charlie, தனது அதிஸ்டத்தை மேற்கொண்டு பரிசோதிக்க சூதாட்டத்தில் இறங்குகின்றான்; கொலையாளிக்கு கதவு திறந்துவிட்ட Bruce, மக்களைக் காப்பாற்றுவதில் வெறியாகி விடுகின்றான், அதன் உச்சக்கட்டமாக தனது மனைவிக்கு நோயைக்கொடுத்து பின்பு காப்பாற்ற முனைகின்றான்! இப்படி சின்னாபின்னமாகி விடும் இவர்களதும், இவர்களைச் சார்ந்தவர்களது வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றது படம். அதில் மிக மெலிதாக ஒரு மர்மத்தையும் கலந்திருக்கின்றார்கள்.

படத்தின் பெயர் “Winged Creatures” என்றாலும், படம் சிறகு உடைக்கப் பட்ட மனிதர்களின் அவலங்களைப் பற்றியது. உண்மையைச் சொல்லப் போனால் தொடக்கமும், முடிவும் இல்லாத ஒரு படம். இப்படியான படங்களிற்கு என்ன தேவை என்று கேட்கலாம். எனக்கென்றால், ஒரு ஓவியக்கண்காட்சியில் ஒரு சோகமான சித்திரத்தைப் பார்த்து ரசிப்பது போன்ற ஒரு உணர்வு; மனதை கனக்க வைத்து விட்டுச் செல்கின்றது. படத்தில் பெரும் பகுதி குழந்தை நட்சத்திரங்களான Dakota’க்கும் Josh’க்கும்; அநாசயமாகச் செய்திருக்கின்றார்கள். Kate Beckinsale’இன் அழகு சோகமான படத்தை சற்று குழப்புவதைத் தவிர, மற்றைய நட்சத்திரங்களும் நிறைவாகச் செய்திருக்கின்றார்கள். மிகவும் கருமையான மூலக்கருவைக் கொண்ட ஒரு படம். நீங்கள் அதற்கு தயாரென்றால் தாராளமாகப் பார்க்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget