நெரிசலான சாலையில் இளம் பெண் ஓட்டி வந்த கார் பஞ்சராகிறது. பின்னால் வரும் நடுத்தர வயதுக்காரர் கடுப்பாகி பக்கத்து தெருவுக்கு தனது காரை திருப்புகிறார். ட்ரக் ஒன்றுக்கு வழிவிட்டு ஓரமாகச் செல்கையில் மேலே கட்டியிருந்த பேனர் கார் கண்ணாடி மீது விழுகிறது. காரை விட்டிறங்கி கடைக்காரரிடம் பேனரை அகற்றும்படி கேட்கிறார். அவரோ அது தன்னுடையதில்லை, மேலே உள்ளவர்களுடையது என்கிறார்.
கோபத்தில் காரை ஓட்டி வந்தவர் பேனரை இழுக்க, அதை கட்டியிருந்த கம்பி விசையுடன் அவருக்கு மேலேயுள்ள கண்ணாடியில் மோதி, கண்ணாடி உடைந்து அவர் மீது மழை போல பொழிகிறது. அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சாய்கிறார் காரை ஓட்டி வந்தவர். முதலுதவிக்கு அவரை எடுத்துச் செல்லவோ, ஆம்புலன்ஸ் உதவிக்கு வரவோ முடியாதபடி சுற்றிலும் ட்ராஃபிக் ஜாம். சற்று நேரத்தில் எல்லோரும் பார்த்து நிற்க அந்த எதிர்பாராத விபத்தில் அவர் இறந்து போகிறார்.
ஆனால் இது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை. அவர்கள் நான்கு பேர். ஒரு இளம் பெண், வயதான ஒருவர், குண்டு மனிதன் இவர்கள் மூவரையும் வழி நடத்தும் விபத்துகளை திட்டமிடும் பிரைன் எனப்படும் இளைஞன். நமது லோக்கல் பாஷையில் சொன்னால் கூலிப்படை. ஆனால் இவர்களின் வொர்க்கிங் ஸ்டைல்தான் வித்தியாசம். யாருக்கும் சந்தேகம் வராதபடி விபத்து போல் கொலைகளை செட்டப் செய்வதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி.
ஒருமுறை சக்கர நாற்காலில் இருக்கும் வயதானவரை கொலை செய்ய ஆஃபர் வருகிறது. கொலை செய்ய கேட்பது சக்கர நாற்காலியில் இருப்பவரின் மகன். அந்தக் கொலையை அவர்கள் எப்படி, எங்ஙனம், எந்த வகையில்..... கொஞ்சம் விரிவாக காட்டுகிறார்கள்.
கொரியன் படமொன்றில் இடம்பெறும் உரையாடலை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இரண்டு சகோதரிகள் சிமித்தேரியில் நடக்கும் சவ அடக்கத்தின் போது ஒரு இளைஞனை பார்க்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் அவன் மீது காதல் பற்றிக் கொள்கிறது. அன்று இரவு ஒரு சகோதரி மற்றவளை கொன்று விடுகிறாள். ஏன் அவள் அப்படி செய்தாள்?
அந்த இளைஞனை அவளின் சகோதரியும் காதலித்ததால்.
இல்லை. அந்த இளைஞனை அவர்கள் பார்த்தது சவ அடக்கத்தின் போது. சகோதரி இறந்து அவளின் சவ அடக்கம் நடக்கும் போது மீண்டும் அந்த இளைஞனை பார்க்கலாமே என்பதற்காகதான் அவள் தனது சகோதரியை கொலை செய்கிறாள்.
நீதி - ஒரு சைக்கோ கில்லரை நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால் நீங்களும் அந்த கொலைகாரனைப் போலவே சிந்திக்க வேண்டும்.
மேலே உள்ள கதையில் இருக்கும் புத்திசாலித்தனமான ட்விஸ்ட்தான் பல கொரிய படங்களுக்கு ஆதாரம். இந்த ஹாங்காங் படத்துக்கும் இந்த புத்திசாலித்தனம்தான் அடிப்படை. சக்கர நாற்காலி நபரை வெற்றிகரமாக கொலை செய்த பிறகு எதிர்பாராதவிதமாக அவர்கள் டீமைச் சேர்ந்த குண்டு மனிதன் விபத்தில் இறந்து போகிறான். இறப்பதற்கு முன் பிரைனிடம் அவன் சொல்வது, இதுவும் விபத்துதானா?
இப்போது அவர்களுக்கு கிலியாகிவிடுகிறது. குண்டு ஆள் இறந்து போனது நிஜமாகவே விபத்தா இல்லை அவர்களைப் போல் யாரேனும் திட்டமிட்டு உருவாக்கிய விபத்தா? அவர்கள் பயந்தது போலவே ஒரு ஆள் சந்தேக வட்டத்திற்குள் வர, பிரைன் தனது பிரைன் கழன்று போகும் அளவுக்கு அவனை பின் தொடர்ந்து, அவனது நகர்வுகளை கவனித்து, கடைசியில் அவனையும் ஒரு விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டு அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துகையில்.... கட்.
இதற்கு மேல் சொன்னால் படம் பார்க்கிற போது சுவாரஸியம் மிஸ்ஸாகும்.
படத்தில் யாரும் தேவைக்குக்கூட பேசுவதில்லை. எப்போதாவது ஒன்றிரண்டு அத்தியாவசிய வசனங்கள். ரொம்ப நிதானமாக ஆனால் நம்மை சீட் நுனியில் வைக்கும் அழுத்தமான திரைக்கதை. பிரைனின் நிதானமான நகர்வுகள் நிச்சயமாக சுவாரஸியத்தை தரக் கூடியது.
இந்தப் படத்தை உலக சினிமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக சுவாரஸியமான புத்திசாலி திரைப்படம்.