தாமதமானாலும் தான் சொன்னபடி ஒரே நாளில் மூன்று இடங்களில் இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார் கமல். நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரை, கோவை மற்றும் சென்னையில் ஒரே நாளில் நடத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்காக தனி விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பாராத விதமாக வீசிய புயலால் விழா நடத்துவதற்கு
தேர்வு செய்யப்பட்ட திறந்தவெளி மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறின. வானிலை மோசமாக இருந்ததால் விமானத்தில் செல்வது ஆபத்து என கமலின் நட்பு வட்டாரமும் அவரை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டரங்கில் நடத்தயிருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால் தான் விரும்பியபடி மூன்று நகரங்களில் ஒரே நாளில் விழாவை நடத்துவது என்பதை செயல்படுத்த தீர்மானித்துள்ளார் கமல். டிசம்பர் 7 ஆம் தேதி காலையில் மதுரையிலும், மதியம் கோவையிலும் மாலை சென்னையிலும் இசை வெளியீட்டு விழாவுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. தனி விமானமும் தயார்.
இந்த விமானத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், வைரமுத்து, சங்கர் எசன் லாய் ஆகியோரும் மூன்று நகரங்களுக்கு பறக்கயிருக்கிறார்கள்.
படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை வைரமுத்தும் மீதி பாடல்களை கமல்ஹாசனும் எழுதியுள்ளனர். சென்சார் முடிந்து யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மும்மொழிகளில் வெளியாகிறது.