நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சினிமா விமர்சனம்


நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தைத் தயாரித்த லியோ விஷன் நிறுவனமே தனது சொந்த முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டது. படத்தின் ரிலீஸ் தேதிக்கும் சில நாட்கள் முன்னதாகவே மீடியாவைச் சேர்ந்தவர்களுக்காக படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ஊடகத்தினர் ஆளாளுக்கு படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் மீடியா
மக்களிடம் படத்தைப் பற்றி விசாரித்த சிலர் படத்தை வாங்க போட்டி போட படம் ரிலீசாகாமல் தள்ளிப் போனது. பின்பு படத்தை ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வாங்கி இப்போது வெளியிட்டுள்ளார். இவ்வளவு அலப்பறை கொடுத்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கதைதான் என்ன… படம் எப்படி இருக்கு… என்பதை பார்க்கலாம்…

நாளை திருமண வரவேற்பு, அதற்கு அடுத்த நாள் கல்யாணம் என்கிற நிலையில் இருக்கும் புதுமாப்பிள்ளை விஜய் சேதுபதி தனது நண்பர்கள் மூன்று பேருடன் பொழுது போக கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடிவிட்டு வரலாம் என்று கிளம்புகிறார். பறந்து வந்த பந்தை பிடிக்கும் போது கீழே விழுந்து பின் தலையில் அடிபட்டுவிடுகிறது. இதனால் கடந்த ஓரிரு வருடங்களில் நடந்த அத்தனை சம்பவங்களும் மறந்து போவதுடன் இப்போது அவரிடம் சொல்வதையும் உடனுக்குடன் மறந்து போய்விடுகிறார். இந்த பிரச்சினை இருப்பது பெண் வீட்டுக்குத் தெரிந்தால் எப்படியும் திருமணம் நடக்க விட மாட்டார்கள். இப்படியிருக்கும் போது கல்யாணம் நடந்ததா? என்பதை சிரிக்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள் நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில்.

ஹீரோ ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் கேரக்டரில் வருவார் என்றால் படத்தில அப்படி என்னத்ததான் காட்டி விட முடியும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் படத்தைப் பார்த்தால் என்னடா இது என ஆச்சரியப்பட்டுப் போவார்கள். காரணம் படத்தில் அவ்வளவு காமெடி. சீரியசான கதையை இப்படி காமெடியாக சொல்ல முடியுமா என்ன…? சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். படம் துவங்கியது முதலே சிரிப்பு சர வெடியை கொழுத்தி போட ஆரம்பித்தவர்கள் படம் முடியும் வரை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். என்ன, சில இடங்களில் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டியிருக்கும் பல இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியிருக்கும்.

விஜய் சேதுபதி அவருடன் நண்பர்களாக வரும் மூன்று பேரும் அந்த கேரக்டருக்கு செமயாக செட் ஆகியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி பெர்பாமன்ஸில் பின்னி பெடல் எடுக்கிறார். திருமண மண்டபத்தில் இவர் கொடுக்கிற அலப்பறை இருக்கிறதே… அடேங்கப்பா… தலையில் அடிபட்டத்தில் இருந்து இவர் ஒரே வாக்கியத்தை திருப்பி திருப்பி சொல்வதும் இவர் நடிப்பும் திரையில் முழுக்க ஆக்ரமிக்கிறது. இவரது நண்பராக வரும் சரஸ், பகவதி, இன்னொருவர். இவர்களில் பகவதியும் இன்னொருவரும் முழிக்கிற முழியிலேயே மனுஷனுக்கு சிரிப்பு அள்ளிக்கிட்டு வருது.

பகவதி கேரக்டரில் வரும் நண்பர், எம்ஆர்ஐ ஸ்கேன்க்கு சொல்லுகிற விளக்கம், அடி மனதில் இருந்து வரும் காதல் என இவர் கொடுக்கும் விளக்கம் என காட்சிக்கு காட்சி பொழந்து கட்டுகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார் காயத்ரி. ஏற்கனவே 18 வயசு படத்தில் அறிமுகமாகியவர்தான். நீண்ட நேரம் வருகிற கேரக்டரும் இல்லை. ஆனால் கல்யாண வீட்டில் இவரைப் பார்த்து விஜய் சேதுபதி அடிக்கிற கமென்ட் இருக்கிறதே… அந்த இடத்தில் விஜய் சேதுபதியின் எக்ஸ்பிரசன்ஸ்… அடேங்கப்பா… செம காமடி கலாட்டா.

படத்தில் எண்ணிப்பார்த்தாலே கிரிக்கெட் கிரவுண்ட், வீடு, மருத்துவமனை, கல்யாண மண்டபம் என நாலு அஞ்சு லொகேசன்ஸ்தான் வருது. இவற்றிலேயே வைத்து படத்தை முடித்திருப்பது இயக்குநரின் சாமார்த்தியத்தையே காட்டுகிறது. அதிலும் கடைசி காட்சிகள் அரை மணி நேரமாக திருமண மண்டபத்திலேயே நடக்கின்றன. ஆனாலும், எந்த வித சலிப்பும் தெரியாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள் இந்த காட்சியை. அதிலும் கல்யாண காட்சியில் அடுத்து என்ன நடக்குமோ… என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.

படத்தில் ஓப்பனிங்கில் வரும் பாடல் படத்தின் கதையை ஓரளவுக்கு சொல்லிவிடுகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தைதான் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என்கிற தலைப்பில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இதற்கு திரைக்கதை அமைத்திருக்கும் பாணிதான் ஆச்சரியப்பட வைக்கிறது. சலிப்பே உருவாகாத விதத்தில் உருவாக்கியிருக்கிறார் காட்சிகளை. இது போன்ற படங்கள் வெளியாவதும் வெற்றிபெறுவதும் தமிழ் சினிமாவில் மிக மிக ஆரோக்கியமான விசயங்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget