பூவுலகம் போன்ற கற்பனை உலகம் ஒன்றில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் கதை — அது எமது பூமியில் நடக்கும் கதைதான் என்று வாதிப்பதற்கும் சாத்தியமுண்டு. ஒரு காலப்பகுதியில் உலகத்தின் வெளிப்பரப்பு மனித வாழ்க்கைக்கு தகுதியில்லாது போய்விடுகின்றது. அதன் காரணமாக பாதாள நகரமொன்றை மனிதர்கள் உருவாக்குகின்றார்கள். இது மின்சாரம் போன்ற, ember என அழைக்கப்படும், ஒரு சக்தியினால் உயிரூட்டப்படுகின்றது.
இந்த “city of ember” நகரத்திலிருந்து மீள உலகின் மேற்பரப்புக்கு வரும் வழியை பொதுமக்களிடமிருந்து மறைத்துவிடுகின்றார்கள் அவ்வுலகின் அதிகாரிகள்; அந்த இரகசியம் ஒரு பெட்டியிலிடப்பட்டு மூடப்பட்டு “city of ember”‘இன் நகரக் ஆளுணர்கள் ஊடாக பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகின்றது. இந்த இரசியத்தை தொடர்ந்து பாதுகாக்கும் விதமாக அந்த பெட்டியும் விசேடமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது — அதை யாராலும் திறக்க முடியாது, ஆனால் 200 ஆண்டுகளின் பின்னர் அது தானாகவே திறக்கும்.
வருடங்கள் உருண்டோட, city of ember நகரவாசிகள் வெளியுலக சிந்தனையையே மறந்து வாழத்தொடங்குகின்றார்கள். தவிர நகர எல்லையை தாண்ட முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகின்றது. செம்மறியாட்டு வாழ்க்கை போல மக்களின் வாழ்க்கை — உரிய வயதுக்கு வந்தபின்னர் வாலிவர்களிற்கான (ஆண்களும் பெண்களும்) வேலை குலுக்கல் சீட்டிளுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றது. சுய விருப்பங்கள் பற்றியோ, புது எண்ணப்பாடுகள் பற்றியோ சிந்தனையின்றி வாழ்க்கை சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறு நூற்றாண்டுகள் ஓடிவிட, பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டிருந்த நகரக் ஆளுணர்கள் வம்சம் குறித்த ஒரு ஆளுணரின் அகால மரணத்தினால் முறிந்துவிடுகின்றது; அந்த மரணத்துடன் city of ember’ஐ விட்டு வெளியேறும் இரகசியத்தைக் கொண்ட பெட்டியும் மறக்கப்பட்டு பரணையில் இடப்பட்டு தூசு கட்டத்தொடங்கி விடுகின்றது. நகரத்தின் ஆளுமை இப்போது ஒரு சுய நலக்காரணான Cole’ன் (Bill Murray) கையில் வந்து விட, 200 ஆண்டு காலம் கழியும் தருவாயில் அந்த இரகசியப் பெட்டி திறந்து கொள்ளும்போதிலும் அதை கவனிக்க எவருமில்லை.
இவ்வளவு கதையும் படத்தின் ஒரு சிறு முன்பகுதி. படத்தின் பிரதான கதை பருவத்துக்கு வரும் இரு வாலிபர்களை சுற்றி அமைகின்றது. Lina (Saorise Ronan) முறிந்து விட்ட நகர ஆளுணர் பரம்பரையில் பிறந்த ஒரு துடிப்பான பெண்; இவளின் நண்பன் Doon (Harry Treadaway). இவர்கள் வேலை செய்வதற்கான பிராயத்தை அடையும் தருவாயில் நகரத்தின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவில் சீர் கெட்டுப் போகத் தொடங்கிவிடுகின்றது. Ember’ஐ உற்பத்தி செய்யும் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து போக, நகரம் அடிக்கடி இருட்டடிப்புக்கு உள்ளாகின்றது; தவிர, நகரத்தின் உணவுக் களஞ்சியமும் (தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள்தான் 200 வருடங்களாக காப்பாற்றிவருகின்றது) முடிந்து போகும் தருவாயிலுள்ளது. இவற்றையெல்லாம் பொதுமக்களிடமிந்து மறைத்து விட்டு, உணவு பண்டங்களை பதுக்கத்தொடங்குகின்றான் Cole. தங்களது நகரம் அழிவின் வாயிலில் உள்ளது என்பதை உணர்வது Lina’வும் Doon’உம் மட்டுமே.
200 வருட இரகசியத்தை கட்டிக்காத்து வந்த அந்த பெட்டியை தற்செயலாகக் கண்டு பிடிக்கின்றாள் Lina. ஆனால் அதற்குள் இருந்த ஆவணமோ காலத்தின் போக்கினால் சின்னா பின்னமாக கிழிக்கப்பட்டு இருக்கின்றது; அவற்றில் சில துண்டுகள் முற்றாகவே தொலைந்தும் போய்க் கிடக்கின்றது. தனது உய்த்தறியும் திறனினால், நகரத்தை விட்டு வெளியேறும் இரகசியம் அந்த சிதைந்து போன ஆவணத்தில்தான் இருக்கின்றது என உணரும் Lina, விடுபட்டுப் போன தகவல் துகள்களை Doon’உடன் இணைந்து திரட்டி, நகரத்திலிருந்து வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முயல்வது படத்தின் மிகுதிகதை. இதில் முக்கியம் என்னவெனில், “நகரத்திற்கு வெளியே” என்பது என்னவென்றே இவர்களிற்குத் தெரியாது.
சிறுவர்களிற்கான ஒரு சாகசக் கதை போன்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், நிறைய தத்துவ கருத்துக்கள் செறிந்து இருக்கின்றது. உதாரணத்திற்கு படத்தின் அடிப்படையில், எவ்வாறாக மனிதர்கள் முதுமை அடைய செம்மறியாடுத் தனமான மனப்பாங்கு வளர்ந்து வருகின்றது என்று காட்டப் படுகின்றது. இவ்வாறாக மேலும் பலவிடயங்களைச் சொல்லலாம்.
Atonement படத்தில் வயதிற்கு மிகுந்த நடிப்புத்திறனைக் காட்டி ஆஸ்காரிற்கு தெரிவான Saoirse Ronan’ற்கு வயதுக்கு ஏற்ற ஒரு படம். அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். சாகசக் கதையென்றாலும் அவ்வளவுதூரம் விறுவிறுப்பு இல்லாமல் இருப்பதுதான் படத்தின் ஒரு பிழை. மற்றப்படி படத்தில் ஒரு குறையும் இல்லை. அந்த வித்தியாசமான ஒரு கற்பனைப் பாதாள நகரத்தை திரைக்கு கொண்டுவந்ததில் தமது திறணை வெளிக்காட்டியிருக்கின்றார்கள் பட, மற்றும் ‘செட்’ இயக்குணர்கள். பெரும்பாலும் சிறுவர்களிற்கான படம்தான் என்றாலும் வயதுக்கு வந்தவர்களும் தாராளமாகப் பார்க்கலாம்.