விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சிலும், தியேட்டரிலும் ஒரேநாளில் வெளியாகும்’’ என்று கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசன் நடித்து, டைரக்ட்டு செய்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் தியேட்டர்களில் முதலில் திரையிடப்படும் என்று தியேட்டர் அதிபர்கள் அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அறிவித்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘என் அலுவலக கதவுக்கு வெளியே தெரிவிக்கப்பட்ட தகவல்கள் ஆதாரப்பூர்வமற்றது. இப்போது, இங்கே நான் கொடுப்பதே ஆதாரப்பூர்வமான பேட்டி.
புது வழி–பொது வழி
‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக, மாதங்களாக எனக்கு வந்த மிரட்டல்களை நீங்கள் (நிருபர்கள்) பார்த்து இருப்பீர்கள். நான் செய்யும் வியாபாரம் நியாயமானது. சட்ட விவகாரங்களை அறிந்து செயல்படுகிறேன்.
டி.டி.எச். என்பது, ஒரு புது வழி. நாளை, இது பொது வழி ஆகும். புதிய ஊடகங்களை பார்த்து மிரளுவது, புதிதல்ல. ‘சேட்டிலைட்’ வந்தபோதும் இதேபோல் அமர்க்களம் செய்தார்கள். டி.டி.எச். பிசகானது அல்ல. யாரையும் கீழே தள்ளிவிடாது.
அடிமை அல்ல
‘விஸ்வரூபம்,’ எனது பொருள். என் அங்காடி. இதை விற்கும் பொறுப்பு, அருகதை எனக்கு உண்டு. தியேட்டர்காரர்களுக்கு எந்த பாதகமும் ஏற்படாதவாறு வியாபாரம் செய்து இருக்கிறேன். இதை தடுப்பதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை.
‘‘யாரென்று தெரிகிறதா...இவன் தீயென்று புரிகிறதா...தடைகளை வென்று சரித்திரம் படைத்தவன் என்பது ஞாபகம் வருகிறதா...யாருக்கும் அடிமை இல்லை...யாருக்கும் அரசன் இல்லை’’ என்ற வைரமுத்து வரிகளையே இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
13 பேர் மீது வழக்கு
என் வியாபாரத்தின் அஸ்திவாரத்தை அமைத்துக் கொள்கிற உரிமை எனக்கு இருக்கிறது. என் டி.டி.எச். பங்குதாரரை நான் கைவிட மாட்டேன்.
20.12.2012 அன்று எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதும், என்னை தொழில் செய்ய விடாமல் தடுத்ததும், சட்டப்படி குற்றம். இது தொடர்பாக 13 பேர் மீது வழக்கு தொடர இருக்கிறேன். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை நிச்சயம். மூன்று வருடங்களுக்கான அவர்களின் மொத்த வருமானத்தில், 10 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டியது வரும்.
ஒரேநாளில்...
டி.டி.எச்.சிலும், தியேட்டரிலும் ஒரேநாளில் படத்தை வெளியிட வேண்டும் என்று நேற்று சிலர் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அதுபற்றி யோசிப்பேன்.
யாருடைய வற்புறுத்தலுக்காகவும் ‘விஸ்வரூபம்’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கவில்லை. என் சவுகரியத்துக்காக தள்ளிவைத்து இருக்கிறேன். ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு முன்பு அறிவிப்பேன்.
சட்டவிரோதம்
படத்தை டி.டி.எச். மூலம் வீடுகளுக்கு மட்டும் காண்பிக்கத்தான் லைசென்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேபிள் மூலம் வெளியிடுவதும், கிளப்புகள் மற்றும் கல்யாண மண்டபங்களில் காட்டுவதும், சட்டவிரோதமானது.
அரசாங்கம் எனக்கு துணை நிற்கும். நான் கேட்காமலே அவர்களே செய்வார்கள் என்று நம்புகிறேன்.’’ இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:–
நடிகர் சங்கம்
கேள்வி:– ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினையில், நடிகர் சங்கம் உங்களுக்கு உதவ முன்வந்திருக்கிறதா?
பதில்:– அதுபற்றி அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்களோ, என்னவோ...அன்பு என்பது வியாபாரம் அல்ல. நான் கொடுக்கிறேன். அவர்கள் கொடுக்கவில்லை என்பதற்காக, வருத்தம் இல்லை.
ரசிகர் மன்றம்
கேள்வி:– இந்த விஷயத்தில், உங்கள் ரசிகர் மன்றங்களின் நிலை என்ன?
பதில்:– என் ரசிகர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். கேடயமாக இருப்பார்கள். அவர்களை யாரும் வெகுண்டெழ செய்து விடாதீர்கள்.’’ மேற்கண்டவாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.