அசுரத்தனமான வெற்றியை நோக்கி விக்ரமின் 50 வது படம்


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் "ஐ". இது அவருக்கு 50வது படம். இந்த படம்தான் விக்ரமின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைக்கப்போகிறது. சினிமாவில் போராடி ஜெயித்தவர்களுக்கு விக்ரம்தான் வழிகாட்டி, போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் விக்ரம்தான் ரோல் மாடல். அந்த அளவிற்கு எந்தவித சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் போராடி ஜெயித்தவர் விக்ரம். 

1990ம் ஆண்டு வெளிவந்த "என் காதல் கண்மணி" விக்ரமிற்கு முதல் படம். அந்த படத்திலிருந்து தொடங்கியது விக்ரமின் தோல்விப் பயணம். கிட்டத்தட்ட "சேது"க்கு முன்பு வரையில் அவர் நடித்த 22 படங்களுமே அவரது போராட்ட வாழ்க்கையைச் சொல்லும். நடிப்பு திறமையின் முழு வடிவமான விக்ரம் அவை எல்லாவற்றையும் அடக்கி வைத்துக் கொண்டு சூழ்நிலைக்கும், படத்துக்கும் ஏற்றவாறு நடித்து போராடிய காலம் அவை. சில மலையாள படங்களில் இரண்டாவது, முன்றாவது ஹீரோவாககூட நடித்திருக்கிறார். அவர் நடித்த காதல் கீதம், மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள் போன்ற படத்தை பார்த்தால் விக்ரமா இது என்று ஆச்சர்யப்பட வைக்கும்.

9 வருட போராட்டத்துக்கு பிறகு 1999ம் ஆண்டு வெளிவந்த "சேது" விக்ரமின் சினிமா வாழ்க்கைக்கு டர்னிங் பாயிட்டாக அமைந்தது. அந்தப் படத்தில் முரளி நடிக்க வேண்டியது. கடைசி நேர மாற்றத்தில்தான் விக்ரம் நடித்தார். தனக்குள் தேக்கி வைத்திருந்த நடிப்பு திறமை அனைத்தையும் அதில் கொட்டித் தீர்த்தார். சினிமா உலகம் அவரை திரும்பிப் பார்த்தது. ஆனால் பெரிய வாய்ப்புகளை கொடுக்கவில்லை. சேதுவுக்கு பிறகும் அவருக்கு சினிமா கதவை திறந்து விடவில்லை. சில படங்களில் நடித்த பிறகு "விண்ணுக்கும் மண்ணுக்கும்" படம் அவரை முழுமையாக அடையாளம் காட்டியது. 

தில், தூள், சாமி, ஜெமினி, படங்கள் ஆக்ஷன் ஹீரோவாக்கியது. ஆக்ஷனில் வெற்றி பெற்றாலும், காசி, அந்நியன், பிதாமகன், ராவணன், தெய்வத்திருமகள் படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை தந்தார். பிதாமகன் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அந்நியனும், தெய்வ திருமகளும் விருதுக்கு அருகில் அழைத்துச் சென்றது. இந்த இரண்டுக்கும் இடையில் சாமுராய், கந்தசாமி, மஜா, பீமா, ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் படங்கள் அவருக்கு பெரிய ஸ்பீட் பிரேக்குகளாக அமைந்தது.

வெற்றியும், தோல்வியும் ஒரு கலைஞனுக்கு சகஜம்தான் என்றாலும், விக்ரமின் சமீபத்திய தோல்விகள் கவலையோடு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. தெய்வதிருமகள், ராவணன், டேவிட் படங்களில் அவர் நடிப்பையும், உழைப்பையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனாலும் வணிகரீதியாக அந்த படங்கள் ஏன் வெற்றிபெற வில்லை என்பதை விக்ரம் கவனத்தில் கொள்ள வேண்டும். மஜா, ராஜபாட்டை பீமா, கந்தசாமி போன்றவை விக்ரமே விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தோல்விகள்.

விக்ரம் கடந்து வந்திருக்கும் 49 படங்களும் அவருக்கு பல்வேறு படிப்பினைகளை கொடுத்திருக்கும். தொடர்ந்து வரும் தோல்விகள் அடுத்து அவர் ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அவரை தள்ளியிருக்கிறது. ஒரு கலைஞனுக்கு இது ஆபத்தான சூழ்நிலை என்பதை விக்ரம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தற்போது நடித்து வரும் "ஐ" ஷங்கர் இயக்கும் படம். ஹிட்டுக்கு மினிமம் கியாரண்டி உண்டு. அவரது 50 வது படம் அசுரத்தனமான வெற்றி பெற அனைவரும் வாழ்த்துவோம். 

ஆனால் அதே நேரத்தில் கடந்து வந்த பாதைகள் தந்த அனுபவத்தில் இனி வரும் படங்களை விக்ரம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த 50 படங்களும் அவர் புகழைப் பாடும் படங்களாக அமையும். விக்ரம் 100 வது படம் நடிக்கும்போது தேசிய விருதுகள் அவர் கழுத்து தாங்க முடியாத அளவுக்கு நிறைந்திருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget