கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் நாயகி பூஜா குமார் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸான கதை உலகம் அறிந்ததே. ஆனால் அத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸான விஸ்வரூபம் நல்ல வசூல் செய்து வருகிறது. இங்கிலாந்தில் இன்னும் விஸ்வரூபத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபத்தில் கமல் மனைவியாக
நடித்த பூஜா குமார் நியூ ஜெர்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்தார். கமல் ஹாசன் விஸ்வரூபம்-2 வேலையில் மும்முரமாக உள்ளார். இந்த ஆண்டே விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்ய அவர் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.