தினமொரு கிசுகிசு... பொழுதொரு வதந்தி... இதே நிலை வேறு யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் நிரந்தர பிபி பேஷண்டாகியிருப்பார்கள். ஆனால் பெல்காம் பேரழகி லட்சுமி ராய்க்கு தினமொரு பொழுதொரு விஷயங்கள் பழக்கமாகிவிட்டன. இப்போதெல்லாம் என்னைப் பற்றி கிசுகிசு வந்தால் கோபத்துக்குப் பதில் சிரிப்புதான் வருகிறது என்கிறார் தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன்.
முனி 3 வாய்ப்பை எப்படி பறி கொடுத்தீர்கள்..?
யாரைப் பார்த்தாலும் இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறார்கள். முதலில் ஒரு விஷயம், முனி 3 ல் நான் நடிக்கிறேன் என்று யார் சொன்னது? நானா... இல்லை லாரன்சா...? யாருமே சொல்லவில்லை. மீடியாவே காஞ்சனாவில் நான் நடித்ததால் முனி 3 லும் நான்தான் நடிப்பேன் என்று அவர்களாகவே தீர்மானித்து எழுதினார்கள். இப்போது நடிக்கவில்லை என்றதும் வாய்ப்பு பறிபோனதாக எழுதுகிறார்கள். எல்லாமே மீடியாக்களின் ஊகம்தானே தவிர வேறு ஒன்றுமில்லை.
உண்மையில் முனி 3 ல் என்னதான் நடந்தது?
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில் நடித்த போது காஞ்சனா பற்றி லாரன்ஸ் சொன்னார். அது போன்ற படத்தில் நடிக்க எனக்கும் ஆர்வம் இருந்தது. சரியாக படத்தை தொடங்கும் போது என்னை அழைத்து அதில் நடிக்க வைத்தார். எதிர்பார்த்தது போல படமும் ஹிட். முனி 3 ன் கதை என்ன என்று எனக்கு முன்பே தெரியும். அந்தக் கதைக்கும் கேரக்டருக்கும் நான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்பதும் தெரியும். அதில் வேறொரு நடிகைதான் நடிப்பார் என்பதும் தெரியும். ஆனால் மீடியாதான் அவர்களாகவே கற்பனையாக நான் நடிப்பதாக எழுதினார்கள். இப்போது அவர்களே என்னுடைய வாய்ப்பு பறிபோனதாக எழுதுகிறார்கள்.
தொடர்ந்து கிளாமராக நடிக்கிறீர்களே...?
என்னைத்தேடி எந்த மாதிரி வாய்ப்பு வருதோ அதில்தானே நடிக்க முடியும். என்னால் கிளாமராகதான் நடிக்க முடியும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த போது இரும்புகோட்டை முரட்டு சிங்கத்தில் கிளாமர் காட்டாமல் என்னால் நடிக்கவும் முடியும் என்பதை நிரூபித்தேன். ஒன்பதுல குரு படத்திலும் என்னுடைய நடிப்பு பேசப்படும்.
ஒன்பதுல குரு பற்றிச் சொல்லுங்கள்...?
ஒரு வரியில் சொல்தென்றால், நடிக்க வாய்ப்புள்ள படம். கிளாமர், காமெடின்னு இந்தப் படத்தில் எல்லாமும் இருக்கு. இதுவொரு நல்ல படம். எனக்கு இது பெயரை வாங்கித் தரும்.
இந்தப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
பிடி செல்வகுமாரை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். என்னைப் பார்க்கும் போதெல்லாம் நான் படம் பண்ணினால் நீங்கதான் ஹீரோயின் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அதேபோல் தன்னுடைய முதல் படத்தில் நடிக்க என்னை தேடி வந்து ஸ்கிரிப்ட் தந்தார். எனக்காக அவர் உருவாக்கியிருந்த கேரக்டர் நன்றாக இருந்தது. உடனே சம்மதித்தேன்.
சின்னச் சின்ன கேரக்டர்களிலும் நடிக்கிறீர்களே..?
தாண்டவத்தில் நடித்த போது இந்தக் கேள்வியை பலரும் என்னிடம் கேட்டார்கள். நான் நடித்தால் நன்றாக இருக்கும், பொருத்தமாக இருக்கும் என்று என்னைத் தேடி வரும்போது நானும் அதில் நடிக்கிறேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மங்காத்தாவில் கொஞ்ச நேரம் வந்தாலும் என்னுடைய கேரக்டர்தான் பேசப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும்.
உங்களின் ஆசை...?
முழுநீள ஆக்சன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய ஆசை.